Worlds-Bumpiest-Flight

கடந்த வாரம், அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு சென்ற டெல்டா விமானம் கடுமையாக குலுங்கியதால், பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகிவிடும் என அச்சமடைந்துள்ளனர்.

மோசமான வானிலை மாறுபாடு காரணமாக, விமானம் குலுங்கியதில் பொருட்கள் விமானத்திற்குள் தூக்கி வீசப்பட்டிருக்கின்றன.

விமானத்தின் உள்ளே இருக்கும் உணவுகள் கேபினில் சிதறின. இதனால், விமானம் மின்னியாபோலிஸில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, 25 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

சமீப காலத்தில் விமானம் குலுங்குவது தொடர்பாக பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு, லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் ஏற்பட்ட கடுமையான குலுக்கலில் 73 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக CNN தெரிவித்தது.

இந்த குலுக்கல், விமானிகளுக்கு மிகவும் கணிக்க முடியாத வானிலை நிகழ்வாக இருக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் மிதமான முதல் தீவிரமான குலுக்கல்கள் வரை ஏற்படுகின்றன. பெரும்பாலான பயணிகளுக்கு இது சிறிய அசைவுகளாக உணரப்பட்டாலும், கடுமையான குலுக்கல் விமானத்தின் கட்டமைப்பு சேதம், தற்காலிக கட்டுப்பாடு இழப்பு மற்றும் காயங்களை ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

2009 முதல் 2024 வரை அமெரிக்காவில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கடுமையான காயங்கள், குலுக்கல் காரணமாக ஏற்பட்டதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய தரவுகள் கூறுகின்றன.

இறப்புகள் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன, மேலும் சீட் பெல்ட் அணிவது கடுமையான காயங்களைத் தடுப்பதாக தரவுகள் கூறுகின்றன.

டர்ப்லி (Turbli) என்ற விமான முன்னறிவிப்பு தளம், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் அளித்த ஆதாரங்களிலிருந்து தரவுகளைப் பயன்படுத்தி 10,000-க்கும் மேற்பட்ட விமானப் பாதைகளை ஆய்வு செய்து, உலகின் மிகவும் குலுக்கல் நிறைந்த விமான பாதைகளை அடையாளம் கண்டு தரவரிசைப்படுத்தியுள்ளது.

அர்ஜென்டினாவின் மென்டோசாவுக்கும் சிலியின் சாண்டியாகோவுக்கும் இடையேயான 120 மைல் பயணப் பாதை, ஆண்டிஸ் மலைத்தொடரின் பனி மூடிய உச்சிகளின் அழகிய காட்சிகளை வழங்குகிறது. ஆனால் டர்ப்லி தரவுகளின்படி, இது உலகின் மிகவும் குலுக்கல் நிறைந்த விமானப் பாதையாகும்.

உலகின் மிகவும் குலுக்கல் நிறைந்த 10 பயணப் பாதைகளில் பெரும்பாலானவை ஆண்டிஸ் மற்றும் ஹிமாலயம் போன்ற மலைத்தொடர்களை உள்ளடக்கியதாக உள்ளன. ஆண்டிஸ், பூமியின் மிக நீளமான நிலப்பரப்பு மலைத்தொடராகும். அதனாலேயே அது பயணப் பாதைகளில் வந்துவிடுகின்றது.

அந்த வரிசையில் அமெரிக்காவின் ராக்கி மலைகள் வழியாக டென்வர் மற்றும் சால்ட் லேக் சிட்டியை இணைக்கும் விமானப் பாதைகள் மிகவும் குலுக்கல் நிறைந்தவை. ஐரோப்பாவில், பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து இடையே உள்ள ஆல்ப்ஸ் மலைகள் மீது செல்லும் பாதைகளும் இதே நிலையில் உள்ளன என்று டர்ப்லி கூறுகிறது.

2023 ஆய்வின்படி, உலகின் மிகவும் பரபரப்பான விமானப் பாதைகளில் ஒன்றான வட அட்லாண்டிக்கில், 1979ஐ விட 2020இல் கடுமையான குலுக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் 55% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இது 41% அதிகரித்துள்ளது. 2017இல் நடத்தப்பட்ட ஆய்வு, நூற்றாண்டின் இறுதிக்குள் காயம் ஏற்படுத்தக்கூடிய குலுக்கல் உலகளவில் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்கலாம் என்று கணித்துள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest