
கிங் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஒரு கேமிங் ஸ்டூடியோ. உலகப் புகழ்பெற்ற கேண்டி க்ரஷ் (Candy Crush) விளையாட்டுகள் இவர்களால் உருவாக்கப்பட்டது.
இந்த ஸ்டூடியோவில் பணியாற்றும் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் அவர்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவே அவர்களது வேலையைச் செய்கிறது என்பதால்!
தற்போது லெவல் டிசைனிங் மற்றும் கதை உருவாக்குதல் ஆகிய துறைகளில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.
MobileGamer.biz தளம் குறிப்பிடுவதன்படி தற்போது ஃபார்ம் ஹீரோஸ் சாகா (Farm Heros Saga) என்ற ப்ராஜக்டில் பணியாற்றிவந்த 50 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
“லெவல் டிசனிங்கில் இருந்த பெரும்பாலானோர் நீக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் விரைவாக லெவல் டிசைனிங் செய்யும் கருவியைக் கண்டுபிடித்தனர். AI கருவிகள் மனித அணிகளுக்குப் பதில் அமர்த்தப்படுகின்றன.
நகல் எழுதும் குழுவினரின் வேலையை அவர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவே செய்வதனால் அவர்களும் நீக்கப்படுகின்றனர்.” என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஊழியர் அந்த தளத்தில் தெரிவித்துள்ளார்.

லண்டன், ஸ்டாக்ஹோம், பெர்லின் மற்றும் பார்சிலோனா ஆகிய இடங்களில் பணியாற்றிய ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சில கேம்களில் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு கார்டனிங் விடுமுறை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கார்டனிங் விடுமுறை என்பது உடனடியாக போட்டி நிறுவனத்தில் சேருவதையும், முக்கிய தகவல்கள் கசிவதையும் தடுப்பதற்காக அலுவலகத்துக்கு வராமலே சில மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கும் முறை.

“செயற்கை நுண்ணறிவால் அதனை உருவாக்கியவர்களே வேலை இழப்பதைப் பார்க்க அருவருப்பாக இருக்கிறது” என மற்றொரு ஊழியர் ஆதங்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கிங் ஸ்டூடியோ, செயற்கை நுண்ணறிவை சாதாரண வேலைகளுக்கு அமர்த்தி அதன் ஊழியர்கள் கிரியேட்டிவ்வாக பணியாற்ற அதிக நேரம் கொடுப்பதாகக் கூறியிருந்தது. ஆனால் ஒரு ஆண்டிலேயே அதன் நிலைப்பாட்டிலிருந்து விலகி வேலை நீக்கம் செய்துள்ளது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.