
விஜயகாந்தின் 100-வது திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ ரிலீஸாகிறது. படத்தின் மறு வெளியீட்டையொட்டி நேற்று சென்னை கமலா திரையரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விஜயகாந்த் உடனான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விஜயகாந்தின் நினைவுகளை கண் கலங்கப் பேசியிருக்கிறார்.

விஜய பிரபாகரன் பேசும்போது, “தமிழ் சினிமாவில் இந்தத் திரைப்படம் ஒரு எவர்கிரீன். இந்தப் படத்தை எடுப்பதற்கு கேப்டனும், பப்பாவும், இயக்குநர் செல்வமணி சாரும் முக்கியமானவர்களாக இருந்திருக்கிறார்கள்.
சின்ன வயதிலிருந்து ராவத்தர் வாபாவை பப்பா என்றுதான் அழைப்பேன். வாபாதான் பப்பாவாக மாறிவிட்டது. இப்படம் கேப்டனின் 100-வது திரைப்படம். ஆனால், அவர் மறைவிற்குப் பிறகு இதை முதல் படமாக நாம் கொண்டாட வேண்டும்.
அவர் நடித்த 156 திரைப்படங்களும் இன்றைய தலைமுறையினருக்கு ரீ ரிலீஸாகும். திரைப்படம் தொடர்பாக படிக்கும் மாணவர்களுக்கும் இத்திரைப்படம் கேஸ் ஸ்டடி போல இருக்கும்.
தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எப்படியான கடினங்களை மேற்கொண்டு ஸ்டண்ட் செய்தார் என்பதை எங்களை அழைத்து விளக்குவார்.
இப்படத்திற்காக மற்றவர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதையும் அப்பா எங்களிடம் சொல்லியிருக்கிறார்.
இப்படியான படங்களை கொண்டாட வேண்டியது நம் பொறுப்பு. ரம்யா கிருஷ்ணன் மேம் நடந்து வரும்போது ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல்தான் நினைவிற்கு வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சரத்குமார் சாருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அந்தளவிற்கு அவர் சவால்களை சந்தித்திருக்கிறார். அதுபோல, மன்சூர் அலி கான் சார் சிறுவயதிலிருந்து என்னை தூக்கி வைத்துக் கொஞ்சுவார்.
கேப்டன் இறந்த சமயத்தில் இறுதி சடங்கு வரை உடனிருந்து நல் உள்ளம் மன்சூர் அலி கான் சார். இந்த திரைப்படம் நடக்கும்போது நான் பிறந்ததற்காகவும், விடுதலை புலிகள் இயக்கத்தில் தலைவர் பிரபாகரன் நினைவாகதான் எனக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்ததாக அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார்.
‘இந்த பெயர் பற்றி உனக்கு இன்னைக்கு தெரியாது. நான் இல்லையென்றாலும் இந்த பெயர் உன்னை பெயர் சொல்லி உயர்த்தும்’ என அப்பா சொல்லியிருக்கிறார்.
கட்சி பிரசாரத்தை முடித்துவிட்டு இன்று காலை உடனடியாக இங்கு வந்திருக்கிறேன். ‘குடும்ப விழாக்களுக்குச் செல்லவில்லை என்றாலும் அன்பாக அழைத்தால் கட்சி, சினிமா நண்பர்களின் விழாவுக்கு செல்ல வேண்டும்’ என அப்பா சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்.

அப்பா இன்று இல்லையென்றாலும் இந்த குழுவோடு இணைந்து நான் கொண்டாட வேண்டும் என்பதற்காக இங்கு வந்திருக்கிறேன்.
அப்பா இறந்து ஒரு வருடம் ஆகியப் பிறகும் இன்னும் நான் அழுதுக் கொண்டிருக்கிறேன் எனப் பலரும் கிண்டல் செய்கிறார்கள்.
ஆனால், அப்பாவை நினைத்து நான் தினந்தோறும் அழுவேன். அதில் எந்த அசிங்கமும், கோழைத்தனமும் இல்லை. இந்தப் படம் இப்போது ரீ ரிலீஸில் 100 நாள்கள் ஓட வேண்டும்.” எனப் பேசினார்.