
மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவருமான விஜயகாந்தின் 100-வது திரைப்படம், ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடந்தது.
அதில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய பிரபாகரன், ரம்யா கிருஷ்ணன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் படம் குறித்தும், விஜயகாந்த் குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“அன்பின் உருவமாக வாழ்ந்த, இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிற கேப்டனின் 100-வது படத்தில், நான் அறிமுகப்படுத்தப்பட்டேன்.
சென்னையில் நல்ல மழை. கிட்டத்தட்ட வெள்ள நிலைமை. அப்போது ரயிலில் அந்த மலைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த மலையில் பாதை இல்லை. 20 கி.மீக்கு மேல் கார் போக முடியாது. அங்கே ராவுத்தர் பாதைப் போட்டு, ஜீப்பில் அழைத்து சென்றார்.
அப்படி போகும்போது, மஞ்சளும், பச்சையும் கலந்து நீட்டமான பாம்பு சென்றுகொண்டிருந்தது. ‘ஐயோ, பாம்பு’ என்று நான் சொன்னதும், ‘சத்தம் போடாதீங்க, இல்லைனா ஹீரோயின் போயிடுவாங்க’ என்று அசிஸ்டன்ட் டைரக்டர் என் வாயைப் பொத்திவிட்டார். அப்படியான ரிஸ்கான இடம் அந்த மலை.
ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய ஹீரோயின் சரண்யா. ஆனால், மலை எல்லாம் பார்த்த அவர், படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
60 குதிரைகள், 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட், அங்கே உள்ள மக்கள் என பலர் நடித்தனர்.
படப்பிடிப்பின் போது, மோகன் என்கிற தொழில்நுட்ப கலைஞர் இறந்துவிட்டார். அதனால், சில நாள்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஆர்.சுந்தரராஜன் சார் பயணித்த வண்டியும் விபத்தில் சிக்கி, டிரைவர் இறந்துவிட்டார்.
இப்படி பல போராட்டங்களுக்கு பிறகு தான், படப்பிடிப்பு நடந்தது.

படத்தில் இறுதி நாள் அன்று தான் என்று நினைக்கிறேன். அப்போது தான் பிரபாகரன் தம்பி பிறந்தார். அது மிக சென்டிமென்ட்.
ஏழு நாள் சண்டைக் காட்சிகளில் கேப்டன் என்னைப் படுத்தியதைவிட, நான் அவரைப் படுத்திவிட்டேன். அன்று நான் ஒரு புது நடிகன் என்று எனக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார்.
செட்டை விட்டு அவர் வெளியே போகவேமாட்டார். ஃபைட்டர்ஸ் உடன் பேசிக்கொண்டு, அவர்களை விளையாட வைத்துக்கொண்டே தான் இருப்பார்” என்றார்.