hero-imag-2025-09-19T163802.328

சமீபத்தில் ஒரு வீடியோ சோஷியல் மீடியாக்களில் செய்தியாக வந்தது. பார்க்கவே கொஞ்சம் பதைபதைப்பாக, மனசுக்குப் பாரமாக இருந்தது. பெங்களூருவில் ஒரு மஹிந்திரா காரில், சன்ரூஃபில் ஏறி நின்று கொண்டு பயணித்த சிறுவன், மேலே பாலத்தில் உள்ள தடுப்பில் தலை மோதிய வீடியோ அது. அந்தச் சிறுவன் தவறிவிட்டான் என்கிறார்கள். சிலர் சிகிச்சையில் இருக்கிறான் என்கிறார்கள். கனத்த இதயத்தோடுதான் இதை எழுதுகிறேன்.

இதில் ஓட்டுநரின் தவறுதான் முழுக்க முழுக்க’ என்று நன்றாகவே தெரிகிறது. காரணம், மேலே தடுப்பு வரும்போதாவது காரின் வேகத்தை மட்டுப்படுத்தி இருக்கலாம்.

இன்னொரு விஷயம் சிட்டி மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களில் இப்படி சன்ரூஃபைத் திறந்தபடி, குழந்தைகளை ஏற்றிப் பயணிப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும், அவர் பயணித்தது. இதில் பெங்களூரு காவல்துறை இன்னும் கடுமையான சட்டத்தை அமுல்படுத்தி இருக்கிறது.

இனிமேல் சட்டங்களை இயற்றி, அபராதம் போட்டு என்ன செய்ய? உயிர்ப்பலியை மீட்க முடியாது. இதைத் தாண்டி ஒரு விஷயம் புலப்படுகிறது. சன்ரூஃப் என்பது ஒரு காருக்கு எக்ஸ்ட்ரா அந்தஸ்தைத்தான் தரக்கூடியதாக இருக்கிறது. பாதுகாப்பைத் தரக்கூடிய விஷயமா என்றால்… ம்ஹ்ஹூம்.

இதை அந்தஸ்து என்றுகூடச் சொல்ல முடியாது. இது ஒரு ஜிகினாத்தனம் என்று சொன்னால், கார் நிறுவனங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. இந்த ஜிகினாத்தனத்துக்கு எக்ஸ்ட்ரா ஆயிரங்களோ, லட்சங்களோ கொடுக்க வேண்டியிருந்தாலும், அதற்கும் தயங்காமல் வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு, கார்களில் தேவையில்லாத வசதிகள் என்று சில வசதிகளைப் பட்டியலிட்டிருந்தோம். அதில் முதன்மையானதாக இருப்பது இந்த சன்ரூஃப் என்றே சொல்லலாம். கார்களில் ஒயர்லெஸ் சார்ஜிங், வென்டிலேட்டட் சீட்ஸ், மசாஜ் சீட், ஆர்ம்ரெஸ்ட், அடாஸ், டேஷ் கேமரா என்று நீங்கள் எந்தவிதமான வசதியை எடுத்துக் கொண்டாலும், அதில் ஏதாவது ஒரு பலன் இருக்கும்.

ஆனால், சன்ரூஃப்? இது தேவையில்லாததாக இருந்தால்கூடப் பரவாயில்லை; பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதாக இருப்பதுதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

இந்தச் சிறுவன் சம்பவம் ஒன்றும் புதிதில்லை; இதற்கு முன்பு இந்தியாவில் இப்படிப் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சன்ரூஃப் கொண்ட கார் வாங்கும்போது, பல விஷயங்களைக் கவனியுங்கள். ஏற்கெனவே இதை மோட்டார் கிளினிக் பதிலில் வாசகர் கேட்டிருந்தார். அவருக்குப் பதிலளித்தும் இருக்கிறோம். எனவே, சன்ரூஃப் வைத்திருக்கும் கார்களில் எப்படியெல்லாம் ஆபத்து வரும் என்பதைப் பார்க்கலாம்.

கார் விபத்தின்போது ரோல்ஓவர் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இதுபோன்ற நேரங்களில் திறந்திருக்கும் அல்லது ஒழுங்காக மூடப்படாத சன்ரூஃப் ஏரியாவில், காரில் உள்ள பயணிகள் காரிலிருந்து வெளியே தூக்கி எறியப்படவோ அல்லது அதிகமான காயங்களுக்கு உள்ளாகவோ வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சன்ரூஃப் திறந்திருக்கும்போது விபத்தான காரில் பயணிகள் இறந்ததாகச் செய்திகளும் உண்டு.

சன்ரூஃப் என்பது செல்போனுக்கு டெம்பர்டு கிளாஸ் இருப்பதைப் போன்று, தடிமனான டெம்பர்டு கண்ணாடியால்தான் செய்யப்பட்டிருக்கும். இது விண்ட்ஷீல்டு போன்று மிகவும் தரமானதாக இருக்க வாய்ப்பில்லை. எளிதாக உடைந்துவிடும் தன்மை கொண்டது. விபத்தின்போது உடையும் கண்ணாடிகளால், உள்பயணிகளுக்குக் கண்ணாடியால் காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

நீங்கள் ஒரு செய்தியிலேயே படித்திருக்கலாம். மஹிந்திரா வாடிக்கையாளர் ஒருவர் தனது சன்ரூஃப் கொண்ட காரை அருவிக்குக் கீழே கொண்டு நிறுத்தியிருக்கிறார். காருக்குள்ளே அருவி நீர் கொட்டியதால் காரின் இன்டீரியர் பாழானதாக ஒரு வீடியோ வைரல் ஆனது.

ஒழுங்காகப் பராமரிக்கப்படாத மற்றும் சரியாக ஃபிட் செய்யப்படாத சன்ரூஃப் கொண்ட கார்களில், மழை நேரங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து இன்டீரியர் வீணாகலாம். மேலும் காரின் ஏசி, ஸ்டீரியோ சிஸ்டம், டச் ஸ்க்ரீன் போன்ற எலெக்ட்ரிக் சமாச்சாரங்களும் இதனால் பாதிக்கப்படலாம்.

சிலர் சன்ரூஃபை ஆஃப்டர் மார்க்கெட்டில் பொருத்துவதையும் பார்த்திருக்கிறோம். இது மிகவும் ஆபத்து. காரின் ரூஃபை கட் செய்துதான் சன்ரூஃப் பொருத்த வேண்டும். இதனால் காரின் கட்டுமானமும், க்ராஷ் பெர்ஃபாமன்ஸும் மிகவும் பாதிக்கப்படும். விபத்துகளின்போது கார் எளிதாக நொறுங்க வாய்ப்பிருக்கிறது.

சன்ரூஃபில் பல மெக்கானிக் மற்றும் எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் உண்டு. உங்களுக்கே தெரியும்; காரின் பாகங்கள் எப்போது பழுதடையும் என்று நமக்கே தெரியாது. மூடிய நிலையில் இது பழுதடைந்திருந்தால் பிரச்னை இல்லை. சன்ரூஃப் திறந்த நிலையில் இதன் ஃபங்ஷன் பழுதடைந்தால்… மெக்கானிக் வரும் வரை கார் திறந்த நிலையிலேயேதான் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்க!

சன்ரூஃபைத் திறந்துவிட்டு வெளிக்காற்றை முகத்தில் வாங்கியபடி பயணிப்பது, பயணிகளுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம். சன்ரூஃப் திறந்திருப்பதால், காற்று காருக்குள்ளே புகுந்து காரின் டைனமிக்ஸ் மிகவும் பாதிக்கப்படும். விண்ட்நாய்ஸும் ஓவராக இருக்கும். இது டிரைவருக்கு மிகவும் அன்கம்ஃபர்ட்டை ஏற்படுத்தும்.

கடைசியாக குழந்தைகளை சன்ரூஃபில் நிற்க வைத்துப் பயணிப்பது, நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய பாவம். பயணிகள் சன்ரூஃபில் ஜாலியாகக் காற்று வாங்கியபடி பயணிக்கும்போது விபத்து ஏற்படும்பட்சத்தில்…உள்ளே இருப்பவர்கள்கூட காற்றுப்பைகளால் தப்பிக்க வாய்ப்புண்டு. ஆனால், சன்ரூஃபில் பயணிப்பவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு ரொம்பவும் அரிது!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest