மாநிலங்களவையில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் பேசியிருக்கும் திருச்சி சிவா, “தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இந்திய அளவில் அங்கீகாரங்கள் வேண்டும், அவர்களை இந்திய அளவில் கொண்டாட வேண்டும், CBSE பாடத்திட்டத்தில் அவர்களின் வரலாறு சேர்க்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துப் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும் திருச்சி சிவா, “கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், குயிலி, வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பத்மாசினி, செண்பகராமன், தீரன் சின்னமலை, பூலித்தேவன் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு தேசிய அளவில் கொண்டாடப்பட வேண்டும். இவர்களின் வரலாற்றை CBSE பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இவர்களைக் கொண்டாடுகிறது. குறிப்பாக திமுக திராவிட அரசு தமிழ் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மண்டபம், சாலைகளுக்குப் பெயர், பாடப்புத்தகத்தில் அவர்களின் வரலாறு, சிலை உள்ளிட்ட மரியாதைகளைச் செய்கிறது.
தமிழ்நாட்டில் நேதாஜி சாலை, திலகர் சாலை, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளன. வட மாநிலங்களில் எங்காவது வ.உ.சிதம்பரனார், பூலித்தேவன், குயிலி, செண்பகராமன், தீரன் சின்னமலை உள்ளிட்டவர்களின் பெயர் எதற்கேனும் சுட்டப்பட்டுள்ளதா?
நாங்கள் தேசிய விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றி பாடப்புத்தகங்களில் படிக்கிறோம். நீங்கள் எங்களின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி பாடப்புத்தகங்களில் சேர்த்திருக்கிறீர்களா?

‘வெள்ளையனே வெளியேறு முழக்கத்தை’ முதன்முதலின் முழங்கியவர் பூலித்தேவன், ‘ஜெய் ஹிந்த்’ சொல்லை முதன்முதலில் சொன்னவர் செண்பகராமன், வேலுநாச்சியார் உடன் நின்று வெள்ளையனை எதிர்த்தவர் குயிலி.
முதன்முதலில் வெள்ளையர்களுக்கு எதிராக சொந்தமாக கப்பல் ஓட்டி சிறை வாசம் அனுபவித்தவர் வ.உ.சி. இப்படி பல விடுதலைப் போராட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் வரலாறுகளை CBSE பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அவர்களின் பெயர்கள் சாலைகளுக்கும், போர் கப்பல்களுக்கும் சூட்ட வேண்டும்.
போர் கப்பலை எடுத்து வந்து இந்திய விடுதலைக்காகப் போராட பல போராட்டங்களைச் செய்த செண்பகராமன் பெயரை போர் கப்பலுக்கு வைக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை தேசிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசு.
தமிழ் விடுதலைப் போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நிராகரிக்கக் கூடாது, மறைக்கக் கூடாது” என்று பேசியிருக்கிறார் திருச்சி சிவா.