fcebook-feture-crying-1

பொதுவாக ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி வந்தாலும், அதிக துக்கம் வந்தாலும் அதனை அழுகை மூலமே வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால் அதிகமானோர் தங்களது துக்கம், உணர்ச்சி, மன அழுத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள். இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி சில நேரங்களில் மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வந்து விடுகிறது. அழுது துக்கம், மன அழுத்தம், உணர்வுகளை கட்டுப்படுத்தலாம் என்று என்று நினைத்தால் யாராவது பார்த்தால் நன்றாக இருக்காது என்று அழுவதையும் நிறுத்திக்கொள்வார்கள். மும்பையில் அது போன்று மன அழுத்தம், சோகம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து மீள்வதற்காக கிரையிங் கிளம்(அழும் கிளப்) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் அதிகமாக வசிக்கும் கார்ரோடு பகுதியில் இந்த கிரையிங் கிளப்பை தொடங்கி இருக்கிறார்கள். கடந்த ஜூன் 15ம் தேதியில் இருந்து இந்த கிரையிங் கிளப் செயல்படத் தொடங்கி இருக்கிறது. மன அழுத்ததில் இருப்பவர்களிடம் அவர்களது குறையை கேட்கும் இடமாகவும், மன அழுத்தம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இடமாகவும் இந்த கிரையிங் கிளப் செயல்பட்டு வருகிறது. இந்த கிரையிங் கிளப்பிற்கு வருபவர்களுக்கு தேநீர் கொடுத்து உணர்வு பூர்வமான இசையுடன் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கி அழுவதற்கு வசதி செய்து கொடுக்கிறார்கள்.

அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு நாம் நமது கஷ்டத்தை நினைத்தோ அல்லது மனதில் இருக்கும் கவலைகளை நினைத்தோ, அல்லது நம்மை விட்டுப்போன உறவுகளை நினைத்தோ தேவையான அளவுக்கு கதறி அழுது கொள்ள முடியும். அழுவதற்கு மென்மையான மின்விளக்கு வசதியைக்கூட செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

இது குறித்து கிரையிங் கிளப் வெளியிட்டுள்ள செய்தியில், ”நீங்கள் மனவேதனை, சோர்வு அல்லது வாரம் முழுவதும் ஏற்படும் சுமைகளை குறைக்க வாருங்கள். மென்மையான விளக்குகள், ஆறுதல் தரும் தேநீர் மற்றும் உங்களை புரிந்துகொள்ளும் மக்களால் சூழப்பட்டிருக்கும் நீங்கள், அழ, கூச்சலிட அல்லது அமைதியாக சுதந்திரமாக இருக்க முடியும். இங்கு எந்த நெருக்கடியும் இல்லை. இது அடக்கு முறையான உணர்ச்சியை விட்டுவிடவும், சுவாசிக்கவும், சிறிது இலகுவாக உணரவும் ஒரு சிறந்த இடம்,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது போன்ற ஒரு கிளப் சூரத்தில் 2017ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இது தவிர டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களிலும் இந்த கிரையிங் கிளப் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப் முதலில் ஜப்பானில்தான் தொடங்கியது. ‘கண்ணீர் செயல்பாடு’ அல்லது ‘கண்ணீர் தேடுதல்’ என்று கூறப்படும் ருய்காட்சு என்ற அமைப்புதான் இந்த கிரையிங் கிளப்பை தொடங்கியது. இந்த அமைப்பு மன அழுத்தத்தைக் குறைக்கவும், உணர்ச்சி நலனை மேம்படுத்தவும், மன நலனை மேம்படுத்தவும் அழுவதை மையமாகக் கொண்ட ஒரு ஜப்பானிய நல்வாழ்வு மையமாகும்.

ருய்காட்சு அடிக்கடி உணர்ச்சிபூர்வமான படங்களைப் பார்ப்பதற்கும், மனதைத் தொடும் கதைகளைக் கேட்பதற்கும் அல்லது இதயப்பூர்வமான கடிதங்களைப் படிப்பதற்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அழுகை மூலம் மக்கள் உணர்ச்சிப்போராட்டத்தில் இருந்து விடுபட முடியும் என்பதே ருய்காட்சுவின் கொள்கையாகும். இந்த அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளில் சில நேரம் அழுவதில் பிரபலமானவர்கள் வந்து எப்படி அழவேண்டும் என்று கற்றுக்கொடுப்பார்கள்.

ருய்காட்சு என்ற வார்த்தை முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு ஹிரோகி டெராய் என்பவரால் உருவாக்கப்பட்டது, அவர் முதலில் ‘விவாகரத்து விழாக்களை’ நடத்தி புகழ் பெற்றார். பிரிவு(பிரேக்அப்) அல்லது மன அழுத்ததை நன்றாக அழுவதன் மூலம் அதிலிருந்து மீளமுடியும் என்று ஹிரோகி நம்பினார். அதனை தொடர்ந்தே இந்த கிரையிங் நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார். ஜப்பான் மக்கள் பணிச்சுமை காரணமாக மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் ஹிரோகி இத்திட்டத்தை கொண்டு வந்தார். அது இப்போது உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest