WhatsApp-Image-2025-07-10-at-1.27.05-PM

தனுஷ் இப்போது அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் பரபரப்பாக இயங்கி வருகிறார். ஆனந்த் எல். ராயின் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் களமிறங்கிவிட்டார்.

வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் முன்பிருந்தே பேசப்பட்டு வந்தது.

Dhanush - D54
Dhanush – D54

சமீபத்தில், வேல்ஸ் நிறுவனம் தங்களுடைய லைன் அப்பில் இருக்கும் இயக்குநர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் விக்னேஷ் ராஜாவின் பெயரும் இருந்தது.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். படத்திற்கு பூஜை போட்டு, இன்று படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார்கள்.

பூஜைக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றி மாறனும் வருகை தந்திருக்கிறார். ‘போர் தொழில்’ படத்தின் திரைக்கதையாசிரியர்கள் கூட்டணியான ஆல்ஃப்ரெட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதை வேலைகளைக் கவனித்திருக்கிறார்கள்.

படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு தமிழ் சினிமாவின் சென்சேஷன் மமிதா பைஜூ கமிட்டாகியிருக்கிறார்.

Dhanush - D54
Dhanush – D54

இவரைத் தாண்டி, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன் எனப் பலரும் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தைத் தாண்டி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம், ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பலமான லைன் அப்களை தனது கைவசம் வைத்திருக்கிறார். தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படமும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest