
‘தோனியின் பிறந்தநாள்!’
தோனி, இந்திய கிரிக்கெட்டின் ஆச்சர்ய பெயர் இது. தோனியின் மீதான ரசிகர்களின் கொண்டாட்டமும் ஈர்ப்பும் ஒவ்வொரு முறையும் பிரமிப்பை மட்டுமே கொடுத்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
ஆனால், இன்னமும் அவரால் அவர் மீதான ஈர்ப்பை அப்படியே தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. வேறெந்த வீரருக்கும் பிடிபடாத சூட்சமம் இது. தோனி ஒரு வீரர் என்பதைத் தாண்டி கேப்டனாக, தலைவனாக கொண்டாடப்படுவதால் மட்டுமே இது சாத்தியப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.
‘வீரனல்ல, தலைவன்!’
தோனியின் பேட்டிங் முன்பு போல் இல்லை. அவர் பேட்டிங்கில் தன்னுடைய மிடாஸ் டச்சை எப்போதோ இழந்துவிட்டார். ஆனால், ஒரு தலைவனாக இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறார். அதை நிரூபிக்கும் பொருட்டு நிறைய சம்பவங்களை சுட்டிக் காட்டலாம். கொரோனாவின் முதல் அலைக்கு முன்பாக ஐ.பி.எல் நடக்கும் என்ற நம்பிக்கையில் எல்லா அணிகளும் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

சேப்பாக்கத்தில் சென்னை அணியின் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக லாக் டவுண். ஐ.பி.எல் ஒத்திவைக்கப்படுகிறது. வீரர்கள் அத்தனை பேரும் அவரவர் ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். தோனி நினைத்திருந்தால் முதல் ஆளாக கிளம்பி ராஞ்சிக்கு சென்றிருக்க முடியும். ஆனால், அவர் சென்னையிலேயே இருந்தார். தன்னுடைய அணியின் கடைசி வீரரும் விமானம் ஏறி பத்திரமாக கிளம்பிய பிறகுதான் தோனி சென்னையிலிருந்து கிளம்பினார். அணிக்காக, தன்னுடைய வீரர்களுக்காக யோசிப்பதைத்தான் தோனி எப்போதுமே பிரதானமாக கொண்டிருந்தார். தன்னை விட வீரர்களை முன்னிலைப்படுத்துவதில்தான் அவருக்கு விருப்பம் அதிகம்.
2023 ஐ.பி.எல் சீசனை கவர் செய்ய தயாராகிக் கொண்டிருந்தேன். சீசனுக்கு முன்பாக சேப்பாக்கத்தில் ஒரு நிகழ்வு. புதிதாக கட்டப்பட்டிருந்த கலைஞர் ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவிருந்தார். தோனியும் அதில் சிறப்பு விருந்தினர். நிகழ்வில் சென்னை அணியின் வீரர்கள் அத்தனை பேரும் கலந்துகொண்டிருந்தனர். தோனியால் முதல்வர் ஸ்டாலினுடனே வந்து அப்படியே மேடையில் ஏறியிருக்க முடியும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அணியின் பேருந்திலிருந்து இறங்கி தன்னுடைய வீரர்களையெல்லாம் வரிசையாக முன்னே செல்லவிட்டு அவர்களுக்கு பின்னால் கடைசியாக வந்தார்.

மேடைக்கு கீழே வீரர்களுடன் சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு அதன்பிறகுதான் ஸ்டாலினுடன் மேடையேறினார். இதெல்லாம் சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால், தோனி இதே மாதிரியான விஷயங்களில்தான் அதிக கவனத்தை செலுத்துவார். இந்த மாதிரியான சின்னச்சின்ன விஷயங்களின் மூலமாகவே தன்னுடைய வீரர்களின் நம்பிக்கையை வெகுவாக கவர்ந்திழுப்பார். தோனி இந்திய அணியில் கேப்டனாக இருந்த போதும் கூட, அவருடைய அறைக் கதவு எப்போதுமே திறந்திருக்கும் என்பார்கள். இளம் வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் தோனியின் அறைக்கு செல்ல முடியும். அவரோடு உணவருந்தி உரையாட முடியும். அவரோடு சேர்ந்து வீடியோ கேம்கள் ஆட முடியும். அதனால்தான் இளம் வீரர்களுடன் தோனிக்கு எப்போதுமே ஒரு இடைவெளி ஏற்பட்டதே இல்லை.
‘தலைவனின் குணம்!’
அதே 2023 சீசனில் இன்னொரு சம்பவம். துஷார் தேஷ்பாண்டே அப்போதுதான் சென்னை அணிக்கு வந்திருந்தார். முதல் ஒரு சில போட்டிகளில் பயங்கர அடி வாங்கியிருந்தார். சேப்பாக்கத்தில் நடந்த ஒரு போட்டியில் துஷார் தேஷ்பாண்டே வழக்கம்போல ரன்களை வாரி வழங்கியிருப்பார். ஆனால், பேட்டிங்கில் மொயீன் அலி கலக்கி சென்னை அணி வென்றிருக்கும்.

போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்புக்காக பத்திரிகையாளர்களின் அறையில் அமர்ந்திருந்தோம். அன்றைய நாளில் மொயீன் அலி சிறப்பாக செயல்பட்டிருந்ததால் அவர்தான் பத்திரிகையாளர்களை சந்திக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ட்விஸ்ட் நடந்தது. அன்று துஷார் தேஷ்பாண்டே வந்தார். அவரின் மோசமான பெர்பார்மென்ஸை பற்றிய பத்திரிகையாளர்களின் கேள்வியை நேருக்கு நேராக எதிர்கொண்டார். துணிச்சலாக போ, எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என சென்னை அணி துஷாருக்கு கொடுத்த தைரியமாக இதைப் பார்க்கலாம். வெற்றியடைந்தவரை விட தோல்வியடைந்தவரின் பக்கம் நிற்பது. அவரின் தோளை தட்டிக்கொடுத்து அவரை ஊக்குவிப்பது, இதுதான் தலைவனின் குணம்.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு யார் செல்ல வேண்டும் என்பதை எல்லா கேப்டன்களும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். கேப்டனின் குணாதிசயத்தையும் மனவோட்டத்தையும் அறிந்து தாமாகவே நடக்கும் செயல் இது. ருத்துராஜ் கேப்டனான பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதிலிருந்தே துஷார் தேஷ்பாண்டேவை அனுப்பிய முடிவு யாருடைய தாக்கத்தில் எடுக்கப்பட்டது என்பதை புரிய முடியும்.

‘தோற்றால் நான் வருகிறேன்…’
தோனி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோதும் இதேமாதிரியான நுட்பமான வேலைகளை செய்திருக்கிறார். அதாவது, ஐ.சி.சி தொடர்களின் போது வெற்றி பெறும்போது கேப்டன் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வருவதும், தோல்வியடையும் போது அணியில் சிறப்பாக ஆடிய வீரர்கள் வருவதும் ஒருவித Protocol ஆக இருந்திருக்கிறது. தோனி அதை விரும்பவில்லை. அணி தோல்வியடையும் போது கடினமான கேள்விகளை எதிர்கொள்ள கேப்டனாக நான் முன் வருகிறேன். வெல்லும்போது வேறு எதாவது வீரரை அனுப்பிக்கொள்வோம் என முடிவெடுத்திருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் மேனேஜர் டாக்டர்.பாபா பகிர்ந்துகொண்ட தகவல் இது.
அதேமாதிரி ஜடேஜாவும் சிவம் துபேவும் கடந்த சீசனின் போது ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருந்தனர். அதாவது, ‘எங்கள் இருவருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பிருந்தது. அதனால்தான் தோனி எங்கள் இருவரையும் மேலே ஆடவிட்டு அவர் கீழே இறங்கினார் என கூறியிருப்பர். இதெல்லாம்தான் தோனியை தனித்துவமான தலைவனாக மாற்றுகிறது.

கிரிக்கெட்டை தாண்டி வெளி உலகிலுமே தோனி தனக்கேயுரிய தர மதிப்பீடுகளோடு தன்னை நிலைப்படுத்திக் கொள்கிறார். இன்றைய தேதிக்கு வடக்கு, தெற்கு என எந்த வேறுபாடும் இல்லாமல் இந்தியா முழுமைக்கும் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஒரே ஆள் தோனி என்று கூட சொல்லலாம். அவருக்குப் பின்னால் அப்படியொரு ரசிகர் கூட்டம் நிற்கிறது. இந்தக் கூட்டத்தை அவர் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர் விரும்பும் அரசியலை எளிதில் திணிக்கலாம். தோனி அதையெல்லாம் செய்யவே இல்லை. தோனி ஒரு தேசியவாதிதான். அவருக்கு கடவுள் பக்தி அதிகம் உண்டு.
‘அரசியல் தெளிவு…’
ஆன்மீகத்தின் மீது பெரிய நம்பிக்கைக் கொண்டவர். இந்திய அணி 2011 உலகக்கோப்பையை வென்ற கையோடு இரவோடு இரவாக அவர் முடிக்காணிக்கை செய்த சம்பவமெல்லாம் இன்னும் நியாபகமிருக்கிறது. ஆனாலும், இந்தியாவில் இன்று மையம் கொண்டிருக்கும் பா.ஜ.கவின் அரசியலால் தோனியை நெருங்க முடியவில்லை. பா.ஜ.க அதற்கான முயற்சிகளையெல்லாம் செய்யாமல் இல்லை. விவசாயிகள் போராட்டத்தின் போது அத்தனை விளையாட்டு வீரர்களும் ஒரே அரசின் குரலாக ஒலித்திருப்பார்கள்.

எல்லாரும் ஒரு சேர ஒரே விஷயத்தை ட்வீட் செய்து பா.ஜ.க அரசின் பிரசார பீரங்கிகளாக மாறியிருந்தனர். அதில் சிக்காமல் விலகி நின்றது தோனி மட்டும்தான். அதேமாதிரி, ஜார்க்கண்ட் தேர்தலுக்கு முன்பாக அமித் ஷாவே தோனியை நேரில் சந்தித்திருந்தார். எதுவும் வேலைக்காகவில்லை. கருத்துச் சுதந்திரத்துக்கான வெளி நசுக்கப்பட்டு பெரும்பாலான நட்சத்திரங்கள் அரசின் குரலாக மாறி நிற்கையில், இப்படி எந்த வலைலிலும் சிக்காமல் ஒதுங்கி நிற்பதே பெரிய அரசியல் ஸ்டேட்மெண்ட்தான்.

இதற்காகத்தான் சொல்கிறேன். தோனி ஒரு வீரர். அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் மட்டுமே அவருக்கு இத்தனை பெரிய ரசிகர் கூட்டம் இல்லை. தோனி ஒரு தலைவன். எல்லா வீரர்களைப் போலவும் அவர் மீதும் விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டி தன்னைச் சுற்றி இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, அவர்களுக்கு சரியான செய்திகளை கடத்த வேண்டும் என்கிற பொறுப்பு தோனிக்கு இருப்பதை உணர முடிகிறது. ‘நான் நல்ல மனிதனாக மட்டுமே நினைவுகூரப்பட வேண்டும்.’ என தோனி பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். நல்ல மனிதனாக மட்டுமல்ல, நல்ல தலைவனாகவும் நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள் தோனி!