dhoniDK

இந்திய அணியில் தோனிக்கு முன்பு அறிமுகமாகி, பின்னர் தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறனால் அணிக்குள் நிலையான இடத்தை தக்கவைக்க முடியாமல் போன விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்.

இந்த நிலையில், தோனி வருகையால் தான் எப்படி வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் ஆட நேர்ந்தது, தோனி தன்னுள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார்.

 தோனி
தோனி

இந்தியா டுடே ஊடகத்தின் தென்னிந்திய கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் கார்த்திக், “அப்போது அவர் விளையாட்டை அதிகம் பார்த்ததில்லை. ஆனால், கென்யாவில் நடந்த `ஏ’ தொடரின்போது, ​​எல்லோரும் ஒரு வீரரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பந்தை அவர் பலமாக அடிப்பதுபோல இதற்கு முன் பார்த்ததில்லை என்று பலரும் கூறினார். இன்னும் சிலர் அவரை, மிகப்பெரிய சிக்ஸர்களுக்குப் பெயர் பெற்ற கேரி சோபர்ஸுடன் (முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்) ஒப்பிட்டுப் பேசினர்.

மிகவும் வித்தியாசமான நுட்பத்தை தோனி கொண்டிருந்தார். அதுவரையில் யாரும் பார்த்திராத அளவுக்கு பந்தை பலமாக அடித்தார். அந்த நேரத்தில் அதுதான் பரபரப்பான விஷயம்.

அப்போது, ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பராகவும் இந்திய அணி பயன்படுத்தி வந்தது. அதனாலேயே ஒரு கட்டத்தில், `நான் எனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று சொல்லும் நிலைக்கு டிராவிட் சென்றார்.

அதனால் அணி சரியான விக்கெட் கீப்பரை தேடத் தொடங்கியது. படத்தில் கெஸ்ட் ரோல் போல அவ்வப்போது நான் வந்தேன். முதன்மையான ரோல் எப்போதும் தோனிக்குதான்.

தினேஷ் கார்த்திக் - தோனி
தினேஷ் கார்த்திக் – தோனி

அணிக்குள் அவர் வந்தபோது, இந்தியாவை மட்டுமல்லாது அனைவரையும் கவர்ந்தார். மிக விரைவிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலும் தனி அலைகளை உருவாக்கினார்.

அப்படிப்பட்ட ஒருவர் வரும்போது, ​​என்னுடைய பெஸ்ட்டை கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

அதனால், கிடைக்கின்ற இடத்துக்கு ஏற்றாற்போல பச்சோந்தி போல ஆனேன்.

அணியில் ஓப்பனிங் ஸ்லாட் காலியாக இருக்கிறதென்றால், தமிழ்நாடு அணிக்கு சென்று ஓப்பனிங்கில் இறங்க வேண்டும் என்று கேட்டு, ஓப்பனிங் இடத்தைப் பிடிப்பதற்காக ஆடுவேன்.

அதேபோல், மிடில் ஆர்டரில் காலியிடம் இருந்தால், நான் அங்கு பேட்டிங் செய்யக் கேட்பேன்.

எப்போதும் அணிக்குள் நுழைவதற்கான வழிகளைத் தேடுவேன். எனக்கு உண்மையான சவாலே ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்வதுதான்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

என்மீது அதிக அழுத்தத்தை நான் ஏற்படுத்திக் கொண்டேன். சில சமயங்களில் உண்மையில் எனக்கு தேவையானதை நான் செய்யவில்லை.

இருப்பினும், மன உறுதி மற்றும் மீண்டுவருவதன் அவசியத்தை நான் கற்றுக்கொண்டேன்.

என் கரியரில் கடைசி ஐந்தாண்டுகளில் பேட்டிங்கில் 6, 7 ஆகிய இடங்களில் ஆடினேன்.

தோனி எனக்கு நேரடியாக அல்லாமல், மறைமுகமாக என்னுள் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நிறைய கற்றுக் கொடுத்தார்” என்று கூறினார்.

தோனி கேப்டன்சியில் இந்திய டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest