
இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வதேசப் போட்டிக்கு முழுக்கு போட்டு 6 வருடங்கள் ஆனாலும், ஐ.பி.எல்லில் இன்னமும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்.
`44 வயதில் எதற்கு அணியில் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வழிவிட்டுச் செல்லலாமே’ என்ற குரல்கள் ஒருபுறம் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

அதேவேளையில், `இந்திய அணிக்கு மூன்று விதமான ஐ.சி.சி கோப்பைகளை கேப்டனாக முன்னின்று வென்று கொடுத்தவருக்கு தேசிய அணியில்தான் முறையான விடைபெறல் கிடைக்கவில்லை.
ஐ.பி.எல்லில் அது கிடைக்க வேண்டும். அதற்கு முழு தகுதியுடையவர் அவர்.
அந்த சரியான தருணம் வரும் வரையில், அவர் விரும்பும் வரையில் எத்தனை சீசன்கள் ஆடினாலும் ரசிப்போம், ஆதரிப்போம்’ என்ற குரல்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
கடந்த சில சீசன்களாக பேட்டிங்கில் அணிக்கு அவரால் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்ய முடியவில்லை என்றாலும், எந்த மைதானத்துக்குச் சென்றாலும் அவர் பேட்டிங் ஆடும் ஓரிரு பந்துகளுக்காகவே ரசிகர்கள் படையெடுக்கின்றனர்.
அந்த வரவேற்பைக் கண்டு களத்தில் எதிரணி வெளிநாட்டு வீரர்களே வியந்தார்கள் என்பதில் மிகையேதுமில்லை.

இந்த நிலையில், சி.எஸ்.கே அணி கடைசியாக 2023 சீசனில் கோப்பை வென்றதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவரான டெவான் கான்வே, தோனி குறித்து பேசியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய டெவான் கான்வே, “தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும்போது அந்தச் சூழலே பிரமிப்பாக இருக்கும்.
தோனி விளையாடுவதை எதிர்முனையில் இருந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும்” என்று கூறினார்.