போலீஸ், சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி பெண்கள், முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது பணம் பறிக்கும் செயல்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இது குறித்து மத்திய அரசு தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து சைபர் கிரினலல்களின் வலையில் அப்பாவி மக்கள் விழுந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
பெங்களூருவில் பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் டிஜிட்டல் கைதில் சிக்கி தனது வீடு மற்றும் சொத்தை இழந்துள்ளார். பெங்களூரு விக்னான் நகரில் தனது 10 வயது மகனுடன் வசித்து வரும் பெண் சாப்ட்வேர் எஞ்சினிர் பபிதா தாஸ் என்பவருக்கு கூரியரில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்தார்.
அந்த நபர் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி பார்சல் ஒன்று பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருப்பதாக தெரிவித்த அந்த நபர், போன் இணைப்பை மற்றொருவருக்கு டிரான்ஸ்பர் செய்தார்.

அந்த நபர் தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அதோடு கைது செய்ய நேரிடும் என்று கூறி மிரட்டிய அந்த நபர் விசாரணை முடியும் வரை வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட ஒரு மொபைல் செயலியை அனுப்பி அதனை பதிவிறக்கம் செய்யவேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையெனில் உங்களது மகனுக்கு பிரச்னை ஏற்படும் என்றும் மிரட்டினர். மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சைபர் கிரிமினல்கள் சொல்வதை பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் அப்படியே கேட்டார். அவர் பெயரில் இருந்த இரண்டு வீடு கட்டக்கூடிய நிலத்தை மலிவுவிலைக்கு விற்பனை செய்து அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தார்.
அதோடு தான் குடியிருந்த வீட்டையும் விற்பனை செய்து பணத்தை அவர்கள் சொன்ன வங்கி கணக்கில் போட்டார். அதுமட்டுமல்லாது வங்கி ஒன்றில் கடன் வாங்கியும் பணம் கொடுத்தார். மொத்தம் ரூ.2 கோடியை அவர் கொடுத்திருந்தார். அதன் பிறகு சைபர் கிரிமினல்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை வாங்கிக்கொள்ளும்படி கூறினர். அதன் பிறகு அந்த நபர்கள் போனை துண்டித்து போனை ஆப் செய்துவிட்டனர். இதையடுத்து பபிதா தாஸ் இது குறித்து பெங்களூரு சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.