
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் டிம்பிள் ஹயாதி. இவர் தமிழில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். ஐதராபாத்தில் வசித்து வரும் நடிகை டிம்பிள் ஹயாதிக்கு எதிராக அவரது வீட்டுப் பணிப்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
டிம்பிள் வீட்டில் ஒடிசாவைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் வேலை செய்து வந்தார். அவர் ஒடிசாவிலிருந்து வந்து கடந்த மாதம் 22ம் தேதிதான் டிம்பிள் வீட்டில் வேலைக்குச் சேர்ந்து இருந்தார். ஆனால் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து தன்னை, அவர் சித்ரவதை செய்து வந்ததாக பிரியங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா கொடுத்துள்ள புகாரில், ”வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து அடிக்கடி என்னை அவமானப்படுத்தினர். சரியாக சாப்பாடு கொடுக்காமல் கெட்ட வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினர்.

அவர் ‘எனது ஷூவிற்கு உனது வாழ்க்கை ஈடாகாது’ என்று கூறி அவமானப்படுத்தினர். கடந்த 29ம் தேதி டிம்பிளும், அவரது கணவர் டேவிட்டும் சேர்ந்து என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனது பெற்றோரைக் கொலை செய்துவிடுவோம் என்று இரண்டு பேரும் மிரட்டினர்.
அவர்கள் பேசியதை வீடியோ எடுக்க முயன்ற போது டிம்பிள் கணவர் டேவிட் எனது மொபைல் போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்தார்.
அதோடு என்னையும் அடிக்க முயன்றனர். அங்கு நடந்த கைகலப்பில் எனது ஆடை கிழிந்து விட்டது. அவர்கள் என்னை நிர்வாண வீடியோ எடுக்கவும் முயற்சி செய்தனர். அங்கிருந்து தப்பித்து வந்து புகார் செய்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டிம்பிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இக்குற்றச்சாட்டு குறித்து டிம்பிள் இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை. 27 வயதாகும் டிம்பிள், ராமபாணம், வீரமே வாகை சூடும், கிலாடி, யுரேகா, கடலகொண்ட கணேஷ் மற்றும் தேவி 2 படங்களில் நடித்து இருக்கிறார்.