
எப்போதுமே பண்டிகை தேதி பட ரிலீஸ் பட்டியலில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.
ஆனால், இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸுக்கு இப்போது வரை உச்ச நட்சத்திரங்களின் பட ரிலீஸ்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

ஆனால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் சில முக்கியமான திரைப்படங்கள் தீபாவளி ரிலீஸுக்கு இப்போதே தயாராகிவிட்டன.
அப்படங்களின் உறுதியான ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துவிட்டனர். அப்படி தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்ற லிஸ்டை எடுத்துப் பார்ப்போமா…
இந்த லிஸ்டில் முதலாவதாக மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் ‘பைசன்’ திரைப்படம். டிஜிட்டல் பிசினஸ் உள்ளிட்ட அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு தீபாவளி ரேஸுக்குள் முன்பே இந்தப் படம் வந்துவிட்டது.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் கபடி விளையாட்டை பின்னணியாகக் கொண்டது.
சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர். ரஹ்மான் எனப் பயணித்து மாரி செல்வராஜ் இம்முறை இசைப் பணிகளுக்காக நிவாஸ் கே. பிரசன்னாவுடன் கைகோத்திருக்கிறார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இரண்டாவதாக, பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’. சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த கீர்த்தீஸ்வரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் பிளாக் பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு வெளியாகும் பிரதீப் ரங்கநாதன் படமிது. மலையாளத்திலிருந்து ‘ப்ரேமலு’ மமிதா பைஜுவை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார்.
சமீபத்தில் சாய் அபயங்கர் இசையில் வெளிவந்த இப்படத்தின் ‘oorum blood’ பாடலும் ஜென் சி-களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
அதுபோல, இந்தாண்டு பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட். ஒரே நாளில் ஒரு நடிகரின் இரு படங்களெல்லாம் வெளியாவது கோலிவுட்டில் அரிதிலும் அரிது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ திரைப்படமும் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கீர்த்தி ஷெட்டி, கௌரி கிஷன், எஸ்.ஜே. சூர்யா எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் பன்ச் டீஸர் சமீபத்தில் வந்திருந்தது. 2040-ல் நடப்பதாக இந்தப் படத்தின் கதையை விக்னேஷ் சிவன் கோத்திருக்கிறார்.

மேலும், அறிமுக இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி ஆகியோர் நடித்திருக்கும் ‘டீசல்’ திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இருக்கிறது.
திபு நினன் தாமஸ் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பயங்கர வைரலாகியது. இறுதியாக, சமுத்திரக்கனி – கௌதம் மேனன் நடித்திருக்கும் ‘கார்மேகம் செல்வம்’ திரைப்படமும் தீபாவளீ ரேஸில் சமீபத்தில் வந்து கலந்துகொண்டது.
கார் பயணத்தை மையப்படுத்திய இந்த திரைப்படமும் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து ஃபீல் குட் திரைப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இந்தப் பட்டியல்தான் இப்போது வரை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த லிஸ்டில் இந்தப் படங்களும் வர வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கும் திரைப்படம் எது?
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…