
கரூரில் தி.மு.க சார்பில் நாளை முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க மூத்த நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் இருந்து வரும் தி.மு.க தொண்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாட்டை கரூர் மாவட்ட தி.மு.க கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி செய்து வருகிறார்.

விழா நடைபெறும் கோடாங்கிப்பட்டி அருகே பைபாஸையொட்டி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெள்ளோட்டமாகப் பார்க்கப்படும் இந்த முப்பெரும் விழாவை பிரமாண்டமாக நடத்திக் காட்டவேண்டிய கட்டாயத்தில் செந்தில் பாலாஜி இருக்கிறார். இந்த விழாவுக்காக கோடங்கிபட்டி அருகில் 50 ஏக்கர் நிலத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. அதோடு, 200 அடி அகலம் 60 அடி நீளத்தில் மிக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தினம் ஒரு அமைச்சர் என கரூர் கோடங்கிப்பட்டியில் விழா நடைபெறும் இடத்தைப் பார்வையிட வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மதிவாணன் ஆகியோர் ஒவ்வொரு நாளாக வந்து பார்வையிட்டு விழா ஏற்பாடுகள் செந்தில் பாலாஜியோடு ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை இரண்டாவது முறையாக திருச்சியிலிருந்து விழா நடைபெறும் கரூர் திருச்சி பைபாஸ் சாலை கோடங்கிப்பட்டிக்கு கே.என் நேரு வருகை தந்தார். விழா மேடை வடிவமைப்பு மற்றும் தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் அமரக்கூடிய இருக்கை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார்.
அதேபோல், இந்த முப்பெரும் விழாவில், தி.மு.க சார்பில் தந்தை பெரியார் விருது திமுக எம்.பி கனிமொழிக்கும், அறிஞர் அண்ணா விருது சுப.சீதாராமன், கலைஞர் விருது சோ.மா.ராமச்சந்திரன், பேராசிரியர் விருது ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் நா.பழனிச்சாமி மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் விருது சமீபத்தில் மறைந்த அமரர்.குளித்தலை சிவராமன் அவர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

இந்த முப்பரும் விழா மதுரை பைபாஸில் இருந்து திருச்சி பைபாஸில் உள்ள கோடங்கிப்பட்டில் நடைபெற இருப்பதால், நாளை 17-ம் தேதி மட்டும் சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என அனைத்தும் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் வருகையை ஒட்டி கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக முதலமைச்சர் செப்டம்பர் 17-ம் தேதி திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10:30 மணிக்கு வருகிறார். பின்னர், திருச்சியில் நடைபெறும் ஆய்வுக் கூட்டம், உறுதிமொழி ஏற்பு நிகழ்வு ஆகியவற்றில் கலந்துகொள்கிறார். பின்பு, அங்கிருந்து கார் மூலம் கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்து, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர், மாலை 4 மணியளவில் புறப்பட்டு முப்பெரும் விழா நடைபெறும் மேடைக்கு வருகை தர உள்ளார்.

தமிழக முதலமைச்சர் நேரடியாக விழா மேடைக்கு வருகை தருவதற்காக கோடங்கிப்பட்டியில் இருந்து விழா மேடை வரை தனி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்து நடைபெற உள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலை எதிர் கொள்ள பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளது.
இந்நிலையில், ” ‘இந்த விழாவில் 1 லட்சம் சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி என்றால், எத்தனை பேர் இந்த விழாவுக்கு வர இருக்கிறார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்” என்று செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். பிரசார மேடையாகவே இதை முதல்வர் மாற்ற நினைக்கிறார். காரணம், திருச்சியில் விஜய்க்கு சமீபத்தில் கூடிய கூட்டம் தான். அப்போதே, முதல்வர் ‘கொள்கையுள்ள கூட்டம் கரூர் முப்பெரும் விழாவில் கூடும்’ என்று டச் செய்து அறிக்கை வெளியிட்டார். அதனால், இந்த விழாவில் பிரமாண்ட கூட்டத்தை கூட்டிக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க தலைமை இருக்கிறது.

இதனால், மாவட்டம் தோறும் மக்களைத் திரட்டி வருவதில் கூடுதல் எண்ணிக்கை சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது, தி.மு.க-க்கான இமேஜ் பிரச்னையாக என்பதால், நாளை கூட்டத்தை கூட்டி போக வேண்டுமே என்று எல்லா மாவட்டங்களிலும் உள்ள தி.மு.க புள்ளிகள் காலில் வெந்நீர் ஊற்றியதுபோல் பரபரப்பாக இப்போதே அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.