Doctor Vikatan: அலுவலக நேரத்தில் அதிக கொட்டாவி வருகிறது. இரவில் நன்றாகத் தூங்குகிறேன். தூக்கமின்மை பிரச்னை இல்லாதபோதும் இப்படி கொட்டாவி வருவது ஏன்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்

நீங்கள் நன்றாகத் தூங்கிய பிறகும் அலுவலக நேரத்தில் அதிக கொட்டாவி மற்றும் சோர்வு ஏற்படுவதற்கு, உடல்நலக் குறைபாடுகள் அல்லது இரவுத் தூக்கத்தில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம்.
நீங்கள் நன்றாகத் தூங்குவதாக நினைத்தாலும், உங்கள் உடலுக்குத் திருப்தி அளிக்கும் ஆழ்ந்த உறக்கம் (Deep Sleep) கிடைக்காமல் இருக்கலாம். ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) என்ற பாதிப்பு இருக்கிறதா என்றும் பாருங்கள்.
அதாவது, அதிகக் குறட்டையுடன் தூங்குபவர்களுக்கு, தூங்கும்போது காற்றோட்டம் தடைப்பட்டு, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம்.
இதனால் இரவில் தூக்கம் திருப்தியாக இருக்காது, பகலில் அதிக சோர்வு மற்றும் கொட்டாவி வரலாம். தூக்கத்தின் அளவு போதுமானதாக இருந்தாலும், அதன் தரம் குறைவாக இருந்தால், அதாவது சோர்வுக்கு வழிவகுத்தாலும் கொட்டாவி வரலாம்.

ரத்தச்சோகை (Anemia) எனப்படும் அனீமியா இன்று பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். பலருக்கு சோர்வு மற்றும் கொட்டாவிக்கு இதுவே முக்கிய காரணமாக உள்ளது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதால், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் திறன் குறைகிறது. எனவே, ரத்தச்சோகைக்கான டெஸ்ட்டை செய்து பார்க்கவும்.
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உட்பட இதர வைட்டமின் குறைபாடுகள், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் நீரிழப்பு (Dehydration) கூட சோர்வையும் கொட்டாவியையும் தூண்டலாம்.
மனக்கவலை (Anxiety) அல்லது மனச்சோர்வு (Depression) உள்ளவர்கள், தாங்கள் நன்றாகத் தூங்குவதாக நினைத்தாலும், உடல்ரீதியாக திருப்தி அளிக்காத தூக்கத்தைப் பெறக்கூடும். இது பகல் நேரச் சோர்வு மற்றும் அதிக கொட்டாவிக்குக் காரணமாகலாம்.

ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடு போன்ற உடல் சார்ந்த காரணங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, ஒரு மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஸ்லீப் அப்னியா போன்ற பிரச்னைகள் இருக்கலாம் என சந்தேகப்பட்டால், ஸ்லீப் ஸ்டடி (Sleep Study) எனப்படும் சிறப்புப் பரிசோதனை செய்து பார்க்கலாம். மனக்கவலை அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் இருப்பதாகச் சந்தேகித்தால், மனநல மருத்துவரை (Psychiatrist) சந்தித்து ஆலோசனை பெறலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.