E0AE9FE0AF8DE0AE9FE0AF8DE0AE9FE0AF8D

Doctor Vikatan: நாங்கள் வசிக்கும் பகுதியில் கொசுத்தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, இரவில்… இதற்காக மாலை 5 மணிக்கெல்லாம் கொசுவத்திச் சுருள் ஏற்றிவைக்கிறோம். அதைத் தாண்டி, இரவு படுக்கும்போது மின்சாரத்தில் இயங்கும் லிக்விட் கொசுவிரட்டியும் பயன்படுத்துகிறோம்.

ஆனால், என் அப்பாவுக்கு வீஸிங் இருப்பதால், இவை எதுவுமே ஏற்றுக்கொள்வதில்லை. அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை வருகிறது. கொசுக்களிலிருந்தும் தப்பிக்க வேண்டும், வீஸிங்கும் வரக்கூடாது என்றால் என்னதான் செய்வது… மூலிகை கலந்த கொசுவிரட்டிகள் பாதுகாப்பானவையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

மாசு என்பது வெளிப்புறத்தில் இருந்து வருவதை மட்டும் குறிப்பதில்லை. வீட்டுக்குள்ளிருந்தும் மாசு பாதிப்பு ஏற்படலாம்.  அதை ‘இண்டோர் பொல்யூஷன்’ என்கிறோம்.

இண்டோர் ஏர் பொல்யூஷன் என்பது சாணம் போன்றவற்றைப் பயன்படுத்தி, அடுப்பெரிப்பதில் தொடங்கி பல விஷயங்கள் வாயிலாகப் பாதிக்கக்கூடியது.

குறிப்பாக, இந்த வகை மாசானது, சிஓபிடி (Chronic Obstructive Pulmonary Disease ) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பாதிப்பு கொண்டவர்களுக்கு நோய் பாதிப்பைத் தீவிரப்படுத்தக்கூடியது.

இது மட்டுமன்றி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஊதுவத்தி, சாம்பிராணி, கொசுவத்திச் சுருள் போன்றவையும் இதே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே.

இவற்றைப் பயன்படுத்தும்போது புகை வருகிறது. இவற்றில் கெமிக்கல்தான் பயன்படுத்தியிருப்பார்கள்.

கொசுவத்திச் சுருள், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவை வெளியிடும் புகை மற்றும் ரசாயனங்கள், சிகரெட் புகைக்கு இணையான ஆபத்து கொண்டவை.

கொசுவத்திச் சுருள், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவை வெளியிடும் புகை மற்றும் ரசாயனங்கள், சிகரெட் புகைக்கு இணையான ஆபத்து கொண்டவை. இவற்றின் வாடையும் ஆஸ்துமாவைத் தூண்டக்கூடும். வீஸிங் பிரச்னை உள்ளவர்களுக்கு இவை ஆகவே ஆகாது.

வீஸிங், ஆஸ்துமா நோயாளிகள் வீட்டை தூசு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எந்த அளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் வாசனையையும் புகையையும் கிளப்பக்கூடிய சாம்பிராணி, ஊதுவத்தி, கொசுவத்தி, ரூம் ஸ்பிரே போன்றவற்றைத் தவிர்க்க வேண்டியதும்.

பலரும் கொசுவத்திச் சுருள்தான் புகையை வெளியிடும், திரவ வடிவிலான கொசுவிரட்டியும் மேட் வடிவிலானதும்  பாதுகாப்பானவை என நினைக்கிறார்கள். இவையும் கொசுவத்திச் சுருள் போன்றவைதான்.

மிக முக்கியமாக இவை எவையுமே விளம்பரங்களில் காட்டுவது போல கொசுக்களைக் கொல்லப் போவதில்லை. கொசுக்களை வெளியே தள்ள முயலும், அவ்வளவுதான். 

கொசுக்களிடமிருந்து தப்பிக்க கதவுகள், ஜன்னல்களுக்கு நெட் பொருத்துவதுதான் மிகப் பாதுகாப்பான முறை.

கொசுக்களிடமிருந்து தப்பிக்க கதவுகள், ஜன்னல்களுக்கு நெட் பொருத்துவதுதான் மிகப் பாதுகாப்பான முறை. வேறு வழியே இல்லை, கொசுவிரட்டி உபயோகித்தே ஆக வேண்டும் என்பவர்கள்,  திரவ வடிவிலான கொசுவிரட்டியை உபயோகிக்கலாம். 

அதை ஆன்செய்துவிட்டு தூங்கக்கூடாது. மலை 6 முதல் இரவு 10 மணி வரை ஆன் செய்துவிட்டு, பிறகு  அணைத்துவிட்டே தூங்க வேண்டும்.

நொச்சி இலை, வேப்பிலை என ஆர்கானிக் பொருள்களே ஆனாலும் அவற்றைக் கொளுத்தும்போது வெளிவரும் புகையானது ஆஸ்துமா, வீஸிங் நோயாளிகளுக்கு நல்லதல்ல.

பிரச்னை உள்ளவர்கள் அவற்றைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. எனவே, மூலிகை கலந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதிலும் கவனம் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest