E0AE95E0AEB0E0AF8DE0AEAAE0AF8DE0AEAAE0AEAEE0AEBEE0AEA9-E0AEA8E0AEBFE0AEB2E0AF88E0AEAFE0AEBFE0AEB2E0AF8D-E0AEAAE0AEBFE0AEA4E0AF8DE0AEA4E0AEAAE0AF8DE0AEAAE0AF88-E0AE95E0AEB1E0AF8DE0AE95E0AEB3E0AF8D

Doctor Vikatan: என் மகளுக்கு 29 வயதாகிறது. கர்ப்பமாக இருக்கிறாள். இந்நிலையில் அவளுக்கு திடீரென வயிற்றுவலி வந்ததால் மருத்துவரைப் பார்த்து டெஸ்ட் செய்தோம். அதில் அவளுக்கு பித்தப்பை கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்துகள் கொடுத்திருக்கிறார்கள். கர்ப்பகாலத்தில் பித்தப்பை கற்கள் வந்தால் பிரச்னை இல்லையா… அறுவை சிகிச்சை தான் இதற்கான தீர்வா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். 

நித்யா ராமச்சந்திரன்

பித்தப்பையில் கற்கள் இருப்பது கர்ப்பம் உறுதியாவதற்கு முன்போ, கர்ப்பமான பிறகோ  உங்களுக்குத்  தெரியவந்திருக்கலாம். கர்ப்பத்தின்போது கடுமையான வயிற்றுவலியுடன் சில பெண்கள் மருத்துவரை அணுகுவார்கள். அந்நிலையில் அவர்களுக்கு கர்ப்பம் தொடர்பான காரணங்களை ஆராய்ந்துவிட்டு, பிறகு  அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்ப்போம்.

ஸ்கேனிங்கில் பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவரலாம். அது கர்ப்பகாலத்தில் பல பெண்களும் எதிர்கொள்கிற பிரச்னைதான். கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவுகள் மிக அதிகமாக இருக்கும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமானால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் அதிகமானால், பித்தப்பை கற்கள் வரும் வாய்ப்பும் அதிகரிக்கும். புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அதிகரித்தால் பித்தப்பையின் அசைவு குறைந்துவிடும். பித்தப்பைதான் பித்த நீரைச் சுரக்கும். அந்த நீரானது செரிமானத்துக்கு மிகவும் அடிப்படையானது. குறிப்பாக, நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கொழுப்பு செரிமானமாக, பித்த நீர் சரியாகச் சுரக்க வேண்டும். அதற்கு பித்தப்பை சரியாக இயங்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் அளவு அதிகமாக இருக்கும். அதனால் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பித்தப்பை கற்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகமாகும்.

பித்தப்பை சரியாக இயங்காவிட்டால் பித்தப்பையில் கற்கள் உருவாகலாம். அப்படி உருவாகும் கற்கள் அங்கேயே தங்கிவிடலாம். இதனால் உணவு செரிக்காது. கடுமையான வயிற்றுவலி ஏற்படலாம். கடுமையான முதுகுவலியாகவும் உணரப்படலாம். சில நேரங்களில் பித்தப்பை வீங்கலாம். அதை மருந்துகள் கொடுத்தோ, அறுவை சிகிச்சை செய்தோ சரிசெய்ய வேண்டியிருக்கும். கணையமும் பாதிக்கப்படலாம். 

கர்ப்பத்தின் 8 அல்லது 9-வது மாதத்தில் பித்தப்பை கற்கள் வந்தால், அந்தப் பெண்ணுக்கு குறைப்பிரசவம் நிகழவும் வாய்ப்பு உண்டு. கர்ப்பகாலத்தில் பித்தப்பை கற்கள் வந்தால், அந்தப் பெண்ணுக்கு நிறைய மருந்துகள் கொடுக்க முடியாது. முதல் வேலையாக நிறைய தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுவார்கள். கொழுப்பில்லாத உணவுகளை, சிறுசிறு இடைவேளைகளில் சாப்பிட வேண்டும். கடைசித் தீர்வாக அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.  30 வாரத்துக்கு முன்பு என்றால் அறுவை சிகிச்சை செய்யலாம்.  அதே போல கர்ப்பத்தின் ஆரம்ப நாள்களிலோ, கடைசி நாள்களிலோ பாதிப்பு அதிகமானாலும், அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டியிருக்கும்.

கருச்சிதைவு | Miscarriage

பித்தப்பை கற்களை நீக்கும் அறுவை சிகிச்சையில் கர்ப்பப்பையை பெரும்பாலும் தொந்தரவு செய்யாமல் கவனமாகவே இருப்பார்கள். ஆனாலும், கர்ப்பிணிக்கு ஸ்ட்ரெஸ் காரணமாக கருச்சிதைவு ஏற்படலாம். பித்தப்பையில் கற்கள் இருக்கும் நிலையில் வலி வராத பட்சத்தில், பிரசவமாகும்வரைகூட அறுவைசிகிச்சையைத் தள்ளிப்போடலாம். பிரசவம் முடிந்து, குழந்தைக்கு ஆறு மாத காலம் ஆகும்வரை காத்திருந்து, அப்போது உங்களுடைய அறிகுறிகளைப் பார்த்துவிட்டு, அறுவை சிகிச்சை தேவையா என முடிவு செய்யலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest