
இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 300-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை சமன் செய்திருக்கிறது.
குறிப்பாக இரண்டாவது டெஸ்டில் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமானதாக மாறியபோதும், இந்திய பவுலர்கள் பந்துவீசிய அளவுக்கு இங்கிலாந்து பவுலர்கள் பந்துவீசாதது அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணியாக அமைந்தது.
இவ்வாறிருக்க, கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் வெற்றிபெற்று தொடரில் யார் முன்னிலை பெறப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

இந்த இடத்தில்தான், 4 வருடங்களுக்குப் பிறகு ரெட் பால் கிரிக்கெட்டுக்கு திரும்பியிருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மூன்றாவது டெஸ்டில் களமிறங்கப்போவதாகப் பேச்சு உலாவுகிறது.
இங்கிலாந்து அணியின் ஆல்டைம் லெஜெண்ட் ஓய்வுபெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன், அடுத்த போட்டியில் ஆர்ச்சர் விளையாடுவார் என்று நினைப்பதாகக் கூறியிருக்கிறார்.
மேலும், இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் மெக்கல்லம், ஆர்ச்சர் உடற்தகுதியுடன் இருப்பதாகவும், தயாராக இருப்பதாகவும் சிக்னல் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்த போட்டியில் ஆர்ச்சர் களமிறங்கினால் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் வெளிப்படுத்தியிருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து பேசிய சிதான்ஷு கோடக், “ஆர்ச்சர் வருவது சவாலானதாக இருக்கும்.
இங்கிலாந்து அணியில் பந்துவீச்சில் சில மாற்றங்கள் இருக்கலாம், அது எங்களுக்குத் தெரியாது. ஆனால், பிட்ச் சவாலானதாக இருக்கும் என்று தெரிகிறது.

ஒருவேளை, தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி நிர்வாகம் சவாலான பிட்ச் கொடுக்க நினைத்தால் அது போதுமானதுதான்.
அதேசமயம், எந்த பிட்ச் என்றாலும் அது சவாலானதாகத்தான் இருக்கும்.
நீங்கள் நன்றாக பேட்டிங் செய்தால் ஓகே, அப்படியில்லையென்றால் எந்தவொரு பிட்ச்சும் சவாலானதாகத்தான் இருக்கும்.” என்று கூறினார்.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் களமிறங்கினால்? அப்படி களமிறங்கினால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலளிப்பாரா என்பது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.