
இந்திய அணியின் அடுத்த நீண்டகால ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவெடுப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று (ஜூலை 23) தொடங்குகிறது.

இந்நிலையில் இந்தத் தொடரில் சிறப்பாக்க விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர் குறித்து ரவி சாஸ்திரி பாராட்டி பேசியிருக்கிறார்.
“ நான் எப்போதும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இருப்பதை விரும்புகிறேன். அவரை முதல் நாள் பார்த்தவுடன், இந்திய அணிக்கான சரியான ஆல்ரவுண்டர், வாஷிங்டன் சுந்தர்தான் என்று சொன்னேன். இந்திய அணிக்காக பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆல்ரவுண்டராக செயல்படும் பண்புகள் அனைத்தும் அவருக்கு இருக்கிறது.
வாஷிங்டன் சுந்தருக்கு 25 வயதுதான் ஆகிறது. அவர் நிறைய டெஸ்ட் போட்டிகள் விளையாடியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் அவர் மிகுந்த அபாயகரமான பந்துவீச்சாளராக இருப்பார். அவர் மிகவும் சிறப்பாக பந்துவீசுகிறார்.

பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவர் இயல்பாகவே திறமைவாய்ந்த பேட்டர். அவர் 8-வது இடத்தில் களமிறக்கப்படாமல், 6 இடத்தில் களமிறக்கப்படலாம். அவர் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறார். வெளிநாட்டு ஆடுகளங்களிலும் அவர் சிறப்பாக பந்துவீசுகிறார்” என்று பாராட்டி இருக்கிறார்.