
‘இந்தியா வெற்றி!’
பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதத்தையும் இரண்டாம் இன்னிங்ஸில் சதத்தையும் அடித்த கேப்டன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.

‘கில் ஆட்டநாயகன்!’
கில் பேசியதாவது, ‘முதல் போட்டியின் தோல்விக்குப் பிறகு நாங்கள் என்னவெல்லாம் பேசினோமோ அதையெல்லாம் சரியாக களத்தில் செயல்படுத்தியிருக்கிறோம். எங்களுடைய பந்துவீச்சும் பீல்டிங்கும் அற்புதமாக இருந்தது. இந்த மாதிரியான பிட்ச்களில் 400-500 ரன்களை எடுத்துவிட்டால் நம்மால் ஆட்டத்தில் நிலைத்திருக்க முடியும் என தெரியும்.
கடந்த போட்டியில் தவறவிட்டதைப் போல எல்லா போட்டியிலும் அத்தனை கேட்ச்களை ட்ராப் செய்யமாட்டோம். வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசிய விதம் ஆகச்சிறப்பாக இருந்தது. அவர்கள் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்திய விதம்தான் முக்கியமானதாக இருந்தது. பிரஷித் கிருஷ்ணா விக்கெட்டே எடுக்கவில்லையென்றாலும் நன்றாக வீசியிருந்தார்.

ஆகாஷ் தீப் முழு முயற்சியோடு இதயப்பூர்வமாக சிரத்தையெடுத்து வீசியிருந்தார். இப்போது ரொம்பவே சௌகரியமாக உணர்கிறேன். என்னுடைய பேட்டிங் பங்களிப்பால் இந்தத் தொடரை வெல்லும்பட்சத்தில் மகிழ்ச்சியடைவேன். ஒவ்வொரு நாளிலும் எதோ ஒன்றை கற்றுக்கொண்டே இருக்கிறேன். பேட்டிங் ஆடும்போது கேப்டனாக அல்லாமல் ஒரு பேட்டராக மட்டுமே யோசிக்க விரும்புகிறேன். ஒரு கேப்டனாக யோசித்தால் ரிஸ்க் எடுக்க வேண்டிய சில இடங்களில் என்னால் ரிஸ்க் எடுக்க முடியாமல் போகும்.

பும்ரா அடுத்தப் போட்டியில் நிச்சயம் ஆடுவார். லார்ட்ஸ், உலகளவில் பிரசித்திப் பெற்ற மைதானம். ஒரு சிறுவனாக லார்ட்ஸில் ஆட வேண்டும் என்கிற கனவு எல்லாருக்கும் இருக்கும். அதிலும் இப்போது லார்ட்ஸில் உங்களின் தேசிய அணியை வழிநடத்தி கேப்டனாக ஆடப்போவதை மிகப்பெரிய கௌரவமாக நினைக்கிறேன்.’ என்றார்.