gill-in-manchester

ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை உச்சகட்ட பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரையிலான மூன்று போட்டிகளில் இரண்டை இங்கிலாந்து கைப்பற்றியுள்ள சூழலில் இன்று மான்செஸ்டரில் தொடங்கும் நான்காவது போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் லார்ட்ஸில் நடந்த கடந்த போட்டியின் தோல்வி குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் நேற்று (22.07.2025) வெளிப்படையாகப் பேசியுள்ளார் இந்திய கேப்டன் சுப்மன் கில். இங்கிலாந்து ஓப்பனர்கள் பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராலி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்ததாக கடுமையாக சாடியுள்ளார்.

லார்ட்ஸ் போட்டியின் மூன்றாவது நாளில் கடைசி 6 நிமிடங்கள் இருந்தபோது இங்கிலாந்து அணி சவாலான சூழலில் இருந்தது. அப்போது இந்திய அணி இரண்டு ஓவர்கள் வீசியிருக்க முடியும். ஆனால் ஜாக் கிராலி பும்ரா வீசிய ஒவ்வொரு பந்துக்கும் பிறகு பின்வாங்கி நேரத்தைக் கடத்தி, மற்றொரு ஓவர் வீசவிடாமல் தடுத்தார்.

Team India
Team India

அந்த நேரத்தில் கில் ஸ்டம்ப்பை அருகே சென்று ஜாக் கிராலியை நோக்கி, “Grow Some ******” என ஆபாச வார்த்தைகளை கூறியதாக சொல்லப்படுகிறது. இது அத்துடன் முடிந்துவிடவில்லை. சில பந்துகளுக்குப் பிறகு கையில் அடிபட்டதாக ஜாக் பிஸியோ அணியை மைதானத்துக்குள் வரவழைத்தார். அப்போது ஜாக் மற்றும் கில் இடையே நிலைமை கடுமையானது.

மொத்த இந்திய அணியும் டக்கெட் மற்றும் ஜாக் மீது கடுப்புடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. போட்டி முடிந்த பிறகு இந்த சூழலைச் சுட்டிக்காட்டி, இந்திய அணியின் 11 வீரர்கள் இங்கிலாந்தின் 2 வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது “விளையாட்டின் மனப்பான்மையை” கெடுப்பதாக இங்கிலாந்து முகாமிலிருந்து புகார்கள் வந்தன. இங்கிலாந்தில் தரப்பில் இருந்து பலரும் கில்லின் ஆக்ரோஷத்தைக் கண்டித்தனர்.

ஆனால் இந்திய கேப்டன் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறிவிட்டார். இங்கிலாந்து வீரர்கள் மூன்றாவது நாள் 90 விநாடிகள் தாமதமாக உள்ளே வந்ததாகவும், அதன்பிறகும் அதிக நேரத்தை வீணடித்ததாகவும் அது “விளையாட்டு மனப்பானமைக்கு” எதிரானது என்றும் கூறியுள்ளார்.

Shubman Gill - சுப்மன் கில்
Shubman Gill – சுப்மன் கில்

அதைச் செய்வதற்கு ஒரு முறை இருக்கிறது

“10, 20 அல்ல, 90 விநாடிகள் தாமதம். பல அணிகள் இந்த யுத்தியைக் கடைபிடிக்கின்றன. அந்த சூழலில் நாங்களும் கூட குறைவான ஓவர்களையே விளையாட நினைப்போம். ஆனால் அதைச் செய்வதற்கு ஒரு முறை இருக்கிறது. உங்களுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டால் பிஸியோ குழுவினர் வர அனுமதிக்கப்படுகின்றனர். அதை நாங்கள் ஏற்கிறோம்.

ஆனால் 90 வினாடி தாமதமாக கிரீஸுக்கு வருவது விளையாட்டின் மனப்பான்மைக்கு (sprit of the game) பொருந்ததாது. மைதானத்தில் நடந்த பல விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது என்றே நாங்கள் நினைக்கிறோம். இதை நான் மிகவும் பெருமைப்படும் விஷயம் என்று கூறமாட்டேன். ஆனால் இதற்கு முன்னோட்டமாக சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. எங்களுக்கு அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

நீங்கள் வெற்றிபெறுவதற்காக விளையாடும் போது அதில் பல உணர்ச்சிகள் பங்குவகிக்கின்றன. மைதானத்தில் நடக்கக் கூடாத ஒன்று நடப்பதை பார்க்கும்போது அந்த உணர்ச்சிகள் வெகுண்டெழுகின்றன.” எனப் பேசினார் கில்.

இன்று மான்செஸ்டரில் தொடங்கும் போட்டி இந்தியா நிச்சயமாக வெற்றிபெற வேண்டிய ஒன்று. கேப்டன் கில்லுக்கு கடும் சவாலாக அமையவிருக்கிறது!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest