
வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது; கல் உப்பை சூரிய ஒளியில் காயவைத்து உபயோகித்தால் வைட்டமின் டி கிடைக்குமா என்கிற கேள்விகளை சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரியும் சித்த மருத்துவர் பா.தமிழ்க்கனி அவர்களிடம் கேட்டோம்.

”சூரிய ஒளியில் இருந்து நமது உடல் எவ்வாறு வைட்டமின் டி-யை உற்பத்தி செய்கிறது என்ற உயிர் வேதியலை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். நமது தோலில் எபிடெர்மிஸ் (epidermis) என்னும் அடுக்கில் 7 டி ஹைட்ராக்சி கொலஸ்ட்ரால் (7-dehydroxy cholesterol) என்னும் கொழுப்புப்பொருள் இயல்பாகவே இருக்கும். இக்கொழுப்பின் மீது சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலட்- பி (ultra violet -b) கதிர்கள் விழும்போது ப்ரீ வைட்டமின் டி3 (previtamin-d3) ஆக மாற்றமடைகின்றது. இந்த ஒரு நிகழ்ச்சிக்காகவே நமக்கு சூரிய ஒளி அவசியமாகிறது.
இவ்வாறு உருவான ப்ரீ வைட்டமின் டி3 உடலின் வெப்பநிலையால் வைட்டமின் டி3 அல்லது கோலிகால்சிஃபெரால் (CholeCalciferol) ஆக மாற்றமடைகிறது. இந்த மாற்றம் அடைந்த பொருளையும் நம் உடலினால் நேரடியாக பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளுக்குச் சென்று அங்கு வேதியல் மாற்றம் அடைந்து பின் கால்சிட்ரியால் ( Calcitriol) அல்லது 1,25 டைஹைட்ராக்சி வைட்டமின் டி என்னும் முழுமை பெற்ற வைட்டமின் டி-யாக மாறுகின்றது. இவ்வாறு முழுமை அடைந்த வைட்டமின் டி எலும்பு வலுவுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் குடலில் உறிஞ்சப்படுவதற்கும் இன்றியமையாததாகிறது.

இப்போது கல் உப்பைப்பற்றி பார்ப்போம். கல்லுப்பு என்பது கடல் நீரை உப்பளத்தில் தேக்கி சூரிய ஒளியில் காய வைக்கும்போது அதிலுள்ள நீர்த்துவம் ஆவியாகி, மற்றுமுள்ள சோடியம் மற்றும் குளோரைடு இணைந்து உருவாகும் ஒரு கலவை ஆகும்.
இதில் வைட்டமின் டி தயாரிக்க தேவையான எந்தவொரு முன்னோடி வேதிப்பொருளும் இல்லாததினால், இதனை மேலும், சூரிய ஒளியில் வைப்பதால் எந்தவொரு வைட்டமின்களோ, மினரல்களோ கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. குறிப்பாக, வைட்டமின் டி.
நம் தோலின் மூலமாக பெறப்படும் வைட்டமின் டி தவிர வேறு வழிகளில் வைட்டமின் டி-யை பெற முடியுமா என்றால், நிச்சயம் முடியும். சில மீன் வகைகளான சால்மன், சார்டைன், கார்ட் லிவர் ஆயில், முட்டை மஞ்சள் கரு, சில காளான் வகைகளில் வைட்டமின் டி அதிகம் கிடைக்கிறது” என்கிறார் சித்த மருத்துவர் பா.தமிழ்க்கனி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…