
”ஏதாவது ஒரு சாதத்தைக் கலந்து, அதோடு உருளைக்கிழங்கு வெச்சுட்டோம்னா போதும்… என் பசங்க மிச்சம் வைக்காமச் சாப்பிட்ருவாங்க’’ – பல அம்மாக்கள் சொல்கிற டயலாக் இது. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் மிகவும் விரும்பிச் சாப்பிடுவது உருளைக்கிழங்கே. இந்தியா மட்டுமல்ல… உலகெங்கும் இதேநிலைதான்.

1536-ம் ஆண்டில் பெரு நாட்டைக் கைப்பற்றியது ஸ்பானிஷ் படை. அந்தப் படை வீரர்கள்தான் அங்கிருந்த உருளைக்கிழங்கு என்கிற அற்புதமான இந்தக் கிழங்கை கண்டறிந்தார்கள்.
அங்கிருந்து ஐரோப்பாவுக்குக் கிளம்பிப் போனது உருளைக்கிழங்கு. மெள்ள மெள்ள உலகமெங்கும் பயிரிடப்பட்டது. இன்று, உலகில் அதிகமாகப் பயிரிடப்படும் உணவுப்பொருள்களில் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்து நான்காவது இடத்தில் உருளைக்கிழங்கு இருக்கிறது. இப்படித் தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக இருக்கும் உருளைக்கிழங்கால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், அதிகமாக உண்பதால் உண்டாகிற பாதிப்புகள் பற்றியும் விரிவாக சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட், ஸ்டார்ச், வைட்டமின் சி, வைட்டமின் பி 6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கால்சியம், பைட்டோகெமிக்கல்ஸ், காப்பர், நியாசின் ஆகியவை உள்ளன.

இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கலைத் தடுக்கும். உருளைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மாரடைப்பு வருவதைத் தடுக்கும். ஸ்டார்ச், உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும். இதில் உள்ள வைட்டமின் பி 6, மனவளர்ச்சிக்கு அதிக அளவில் உதவும். வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தி, சரும ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு உதவும்.
உணவுப்பாதையில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு இதன் சாறு நல்ல மருந்தாக இருக்கிறது.

நாம் காய்கறிகள் உண்பதே அதில் உள்ள நார்ச்சத்துகளுக்காகத்தான். அதனால் உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்துத்தான் உண்ண வேண்டும். தோலை எடுத்துவிட்டுச் சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்துகள் நமக்குக் கிடைக்காது; கார்போஹைட்ரேட் மட்டுமே கிடைக்கும்.
எனவே, தோல் உரிக்கப்பட்ட உருளைக் கிழங்கைச் சாப்பிடும்போது அதை ஒரு காய்கறியுடன் சேர்த்துச் சாப்பிட்டால்தான் பலன் கிடைக்கும். உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்துக் குறைந்த அளவு எண்ணெய் சேர்த்துக் குறைவான வெப்பநிலையில் தாளித்து உண்ணலாம்.

அதிகமான வெப்பநிலையில், அதிகமான எண்ணெயில் வறுத்து அல்லது ரோஸ்ட் செய்து உருளைக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதில் உள்ள `அக்ரிலமைட்ஸ்’ (Acrylamides) என்னும் நச்சு வெளிப்படும். இது புற்றுநோய் உருவாவதற்குக் காரணமாக அமைந்து விடும். மேலும், இதில் கிளைக்கோஅல்கலாய்ட்ஸ் (Glycoalkaloids) என்னும் நச்சும் வெளிப்படும். இந்த நச்சு கலந்த உருளைக்கிழங்கை உண்ணும்போது நரம்பியல் கோளாறுகள், வாந்தி, வயிற்றுப்போக்கு, குறைந்த ரத்த அழுத்தம் ஆகியவை உண்டாகும்.
குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு ஊட்டச்சத்துகளின் தேவையும் கலோரியின் தேவையும் அதிகமாக இருக்கும். இதனால் இவர்களுக்கு உருளைக்கிழங்கு அதிகமாக தேவை.
உருளைக்கிழங்கில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக அதிகம். எனவே சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். ஆனால், அவர்களின் உடலில் உள்ள கிளைசெமிக்கின் அளவு மிதமாக இருந்தால், அளவாக உண்ணலாம். அதிகமாக இருந்தால், கண்டிப்பாக உண்ணக் கூடாது. வாய்வுப் பிரச்னை உள்ளவர்கள், வாதம், மூலநோய் உள்ளவர்கள், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் உண்ணக் கூடாது. உடல் பருமன் உள்ளவர்கள் தொடர்ச்சியாக உண்ணக் கூடாது. எப்போதாவது உட்கொள்ளலாம். ஆரோக்கியமான முறையில் அளவாகச் சாப்பிடும் பட்சத்தில் உருளைக்கிழங்கு அருமையான ஓர் உணவாகிறது என்கிறார்’’ ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.
* முளைவிட்ட உருளைக்கிழங்குகளைக் கண்டிப்பாக உண்ணக் கூடாது. இவை அதிகமான நச்சுத்தன்மையுடன் இருக்கும். இந்த நச்சு, ஸ்டார்ச்சுடன் கலப்பதால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.
* பச்சை நிறங்களில் காணப்படும் உருளைக்கிழங்குகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இவற்றிலும் நச்சுத்தன்மை அதிகமாக இருக்கும்.
* பாக்கெட்டுகளில் அடைத்துவைத்திருக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ்களைத் தவிர்த்தல் நலம். இது உயர் வெப்பநிலையில் தயார் செய்யப்பட்டிருக்கும்.
* உருளைக்கிழங்கை நல்ல காற்றோட்டமான குளிர்ச்சியான இடத்தில்தான் வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக பிளாஸ்டிக் பைகளில் வைத்துப் பாதுகாக்கக் கூடாது. பேப்பர்களில் வைத்துப் பாதுகாக்கலாம்.
* கண்டிப்பாக ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் குளிர்ச்சி காரணமாக அதில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…