india

தமிழ்நாட்டில் நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரானது காலிறுதிச் சுற்றை எட்டியிருக்கிறது.

லீக் சுற்று போட்டிகள் முடிவில் 6 குழுக்களில் முதலிடம் பிடித்த 6 அணிகள் மற்றும் இரண்டாமிடம் பிடித்த 6 அணிகளில் டாப் 2 அணிகள் என ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை
ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை

இதில், ஸ்பெயின் vs நியூசிலாந்து போட்டியில் வெல்லும் அணியும், இந்தியா vs பெல்ஜியம் போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதும்.

அதேபோல், பிரான்ஸ் vs ஜெர்மனி போட்டியில் வெல்லும் அணியும், நெதர்லாந்து vs அர்ஜென்டினா போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதும்.

இந்த நிலையில், சென்னையில் இன்று பிற்பகல் முதல் காலிறுதிப் போட்டிகள் தொடங்கின.

மதியம் 12:30 மணிக்கு ஆரம்பித்த முதல் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினும், நியூசிலாந்தும் மோதின.

இப்போட்டியில் ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் அணி 4 – 3 என நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்தது.

அதைத்தொடர்ந்து, 3 மணியளவில் தொடங்கிய பிரான்ஸ் vs ஜெர்மனி காலிறுதிப் போட்டியில் இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் தலா 2 கோல் அடித்தன.

இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட்அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

அதில் பிரான்ஸ் தனது முதல் 4 வாய்ப்புகளில் 1 கோல் மட்டுமே அடித்தது. மறுமுனையில் ஜெர்மனி தனது முதல் 4 வாய்ப்புகளில் 3 கோல் அடித்து வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் நெதர்லாந்து vs அர்ஜென்டினா காலிறுதிப் போட்டி தொடங்கியது.

இப்போட்டியில் அர்ஜென்டினா 1 – 0 நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

பின்னர் கடைசி காலிறுதிப் போட்டியாக இரவு 8 மணிக்கு இந்தியா vs பெல்ஜியம் போட்டி தொடங்கியது.

போட்டியின் 12-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தது.

அடுத்த 30 நிமிடங்களுக்கு கோல் போட முடியாமல் பின்தங்கிய நிலையில் இந்தியா போராடிக்கொண்டிருந்த வேளையில், கேப்டன் ரோஹித் 44-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

அடுத்த 3-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஷர்தானந்த் திவாரி ஒரு கோல் அடித்தார்.

2 – 1 என இந்தியா முன்னிலையுடன் ஆடிவந்த நிலையில், பெல்ஜியம் வீரர் ரோஜ் நாதன் ஆட்டத்தின் கடைசி ஒரு நிமிடத்துக்கு கோல் அடித்தார்.

இறுதியில் ஆட்ட நேர முடிவில் போட்டி 2 – 2 என சமநிலை ஆனதால் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

Hockey Men's Junior WC - India vs Belgium
Hockey Men’s Junior WC – India vs Belgium

அதில் பெல்ஜியம் தனது முதல் வாய்ப்பிலேயே கோல், இந்தியா தனது முதல் வாய்ப்பில் கோல் அடிக்கத் தவறியது. ஆனால், ரிவ்யூவில் இந்திய வீரர் பந்தை அடிப்பதற்கு முன்பாகவே கோல் கீப்பர் நகர்ந்ததால் இந்தியாவுக்கு முதல் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அதில் இந்திய வீரர் கோல் அடித்தார்.

அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது வாய்ப்புகளில் இரு அணிகளும் கோல் அடித்தன.

நான்காவது வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்காத தவற, கடைசி வாய்ப்பிலும் பெல்ஜியம் கோல் அடிக்கத் தவறியது.

இந்த சூழலில் 3 – 3 என இரு அணிகளும் இருக்க, இந்தியா தனது கடைசி வாய்ப்பில் கோல் அடித்து 4 – 3 என வென்று அரையிறுதிக்குச் சென்றது.

பெனால்ட்டி ஷூட் அவுட்டில் பெல்ஜியத்தின் இரு வாய்ப்புகளை முறியடித்த இந்திய கோல் கீப்பர் பிரின்ஸ் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார்.

வரும் ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 7) நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில், ஸ்பெயினை இந்தியாவும், ஜெர்மனியை அர்ஜென்டினாவும் எதிர்கொள்ளவிருக்கின்றன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest