
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியினர், லீக் சுற்றில் இந்தியாவிடம் மோசமாக ஆடி தோற்றதைப் போல் அல்லாமல், போட்டியை 19-வது ஓவர் வரை கொண்டு சென்று போராடித் தோற்றனர்.
மறுபக்கம், லீக் போட்டியைப் போல அவசரமாக ஆட்டத்தை முடிக்காமல் நிதானமாக ஆடி வெற்றிபெற்ற இந்திய வீரர்கள், முந்தைய போட்டியில் செய்ததைப் போலவே பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றனர். இத்தகைய செயல் மீண்டும் பேசுபொருளானது.

இவ்வாறிருக்க, நேற்றைய போட்டியில் அரைசதமடித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஏகே 47 துப்பாக்கி ஸ்டைலில் பேட்டை காண்பித்து செலிப்ரேஷன் செய்த விதம், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் துப்பாக்கிச்சூட்டுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்குத் பலருக்கும் தீனியாக அமைந்துவிட்டது.
இந்த நிலையில் சாஹிப்சாதா ஃபர்ஹான், தான் அப்படி செய்ததற்கான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
நாளை இலங்கை அணியுடன் பாகிஸ்தான் மோதவிருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சாஹிப்சாதா ஃபர்ஹானிடம் ஏகே 47 செலிப்ரேஷன் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சாஹிப்சாதா ஃபர்ஹான், “அந்த செலிப்ரேஷன் என்பது வெறுமனே அந்த தருணத்துக்கானது மட்டும்தான்.
பொதுவாக, அரைசதம் அடித்ததும் பெரிதாக நான் செலிப்ரேஷன் செய்வதில்லை. ஆனால், அந்த நேரத்தில் அது தோன்றியதால் அப்படிச் செய்தேன்.

அதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி எனக்கு கவலையும் இல்லை.
நீங்கள் எங்கு விளையாடினாலும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அது இந்தியாவுக்கெதிரான போட்டியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று கூறினார்.