CT_353955

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்த சம்பவம் மூன்று நாள்களாக பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது.

இந்த விவகாரத்தில், ‘பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கிறோம்’ என கேப்டன் சூர்யகுமார் யாதவ் காரணம் தெரிவிக்க, `பாகிஸ்தானுடன் விளையாடவில்லையென்றால் இந்தியாவுக்குத்தான் இழப்பு’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒருபக்கம் கூறுகிறார்.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்தியா வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்
India VS Pakistan

இன்னொருபக்கம், இந்திய அணிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பிலிருந்து எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) மூத்த அதிகாரியொருவர், எதிரணி வீரர்களிடம் கைகுலுக்க வேண்டும் என சட்ட எதுவும் இல்லையென்று கூறியிருக்கிறார்.

பெயர் வெளியிட விரும்பாத அந்த மூத்த அதிகாரி தனியார் ஊடகத்திடம், “எதிரணி வீரர்களிடம் கைகுலுக்குவது தொடர்பாக விதிமுறைகள் புத்தகத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இது நல்லதைப் பரப்பும் ஒரு வித வெளிப்பாடு தானே தவிர உலகளவில் பின்பற்றப்படும் சட்டம் அல்ல.

BCCI
BCCI

அவ்வாறு சட்டமாக இல்லாதபோது, விரிசல் நிறைந்த உறவின் வரலாற்றைக் கொண்ட நாட்டின் அணியுடன் இந்திய அணி கைகுலுக்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் இந்திய அணியினரின் செயல்பாடு குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest