
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.
அந்த எதிர்ப்புகள் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் நடந்து வேர்ல்டு சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பாகிஸ்தான் அணியுடன் லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் விளையாட இந்தியா மறுத்துவிட்டது.

இத்தகைய சூழலில், செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றிருக்கிறது.
செப்டம்பர் 14-ம் தேதி இரு அணிகளும் நேருக்கு நேர் மோதவும் இருக்கின்றன.
இந்த நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி பிரியங்கா சதுர்வேதி இதனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரியங்கா சதுர்வேதி, “இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் ஒவ்வொரு ஸ்பான்சர், ஒளிபரப்பாளர், ஸ்ட்ரீமிங் செயலியையும் பெயரிட்டு அவமானப்படுத்துங்கள்.
ஏனெனில் பிசிசிஐ மற்றும் இந்திய அரசு இந்தப் போட்டியை முன்னெடுத்துச் செல்வதால் இந்தியக் குடிமக்களாகிய நாம் அனைவரும் சத்தமாகவும் தெளிவாகவும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் அனைத்து ஸ்ட்ரீமிங் செயலிகளையும் ஒளிபரப்பு சேனல்களையும் தடை செய்யுமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தையும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அல்லது அவர்களும் ஒளிபரப்புவார்களா?” என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், “நமது சக இந்தியர்கள் மற்றும் நமது வீரர்களின் இரத்தத்தை விடவும் பணம் முக்கியமாகிவிட்டதா? ஆபரேஷன் சிந்தூரில் நயவஞ்சகராக இருந்ததற்காக இந்திய அரசு வெட்கப்பட வேண்டும். நீங்கள் (BCCI) சம்பாதிக்க விரும்பும் ரத்தப் பணம் மட்டுமல்ல, சபிக்கப்பட்ட பணமும்தான்.” என்று கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…