kuldeep

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நேற்று (செப்டம்பர் 9) தொடங்கியது

8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் குரூப் A-யிலும், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் குரூப் B-யிலும் இடம்பெற்றிருக்கின்றன.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது.

இந்த நிலையில், இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இன்று மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

IND vs UAE
IND vs UAE

இந்திய பிளேயிங் லெவனில், அபிஷேக் ஷர்மா, கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்தனர்.

பின்னர், பேட்டிங் இறங்கி 26 ரன்களில் பும்ராவிடம் தங்களின் முதல் விக்கெட்டை இழந்த ஐக்கிய அரபு அமீரகம் அணி, அடுத்த 31 ரன்களுக்கு மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இழந்தது.

13.1 ஓவரில் 57 ரன்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதைத்தொடந்து 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி அபிஷேக் சர்மாவும், கில்லும் ஓப்பனிங் இறங்கினர்.

முதல் ஓவர் முதலே அதிரடி கட்டிய இந்த ஜோடி, 4-வது ஓவரில் அபிஷேக் சர்மாவின் (30) விக்கெட்டில் பிரிந்தது.

அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க அடுத்த ஓவரில் 3-வது பந்தில் கில்லின் வின்னிங் ஷாட்டுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

IND vs UAE
IND vs UAE

வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “பிட்ச் எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்பதற்காக பவுலிங்கை தேர்வு செய்தேன்.

சமீபத்தில் சாம்பியன் டிராபிக்காக நம் வீரர்கள் இங்கு வந்தனர். பிட்ச் நன்றாக இருந்தது. ஆனால், ஸ்லோவாக இருந்தது. ஸ்பின்னர்களுக்கு அது சாதகமாக இருந்தது.

குல்தீப், துபே, வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டனர். தற்போது நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்ற காரணத்திற்காக அதற்கேற்ற ஆட்டத்தை அவர் (அபிஷேக்) ஆடுகிறார்.

இருநூறோ அல்லது ஐம்பதோ எதை சேஸ் செய்தாலும் அவரிடமிருந்து அபாரமான ஆட்டம் வெளிப்படும்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்காக எல்லோருமே ஆவலுடன் இருக்கிறோம்.” என்று கூறினார்.

இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம் கேப்டன் முகமது வசீம், “ஒரு அணியாக பேட்டிங்கை சிறப்பாக தொடங்கினோம்.

ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டத்தை இழந்தோம். அவர்கள் அபாரமான அணி.

மிகச் சிறப்பாக பந்துவீசினர். தங்களுடைய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினர். அதனால்தான் அவர்கள் நம்பர் ஒன் அணி.

ஒரு அணியாக நாங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு வலுவாக மீண்டு வர முயற்சிப்போம்” என்று கூறினார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest