
U19 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை கமலினி இன்று( ஜூலை 26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“கடின உழைப்பு மிகவும் முக்கியம். அது இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. என்னுடைய அப்பா, அம்மாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் எனக்காகத்தான் மதுரையில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள்.
அதுவே பெரிய விஷயம். ஐபிஎலில் மும்பை அணியில் நான் தேர்வானதில் இருந்தே என்னுடைய வாழ்க்கை மாறியது. கிரிக்கெட்டில் அரசியல் இல்லை. திறமையும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி பெற முடியும். பெண் பிள்ளைகளை நம்பி விளையாட விடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர்தான் கமலினி. U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இவரது அதிரடி ஆட்டம் பலரையும் ஈர்த்தது.

அது மட்டுமின்றி நடந்து முடிந்த பெண்கள் ஐபிஎல் தொடரில் மும்பை அணி இவரை கடும் போட்டிக்கு இடையில் 1.60 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.