
கார்த்தியின் 29வது படத்திற்கான படப்பூஜை நாளை நடக்கிறது. இந்தாண்டில் அவர் சத்தமில்லாமல் ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
அந்தப் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படமான தனது 29 வது படத்தை ஆரம்பிக்கிறார் கார்த்தி.

கதைகள் தேர்வில் தனி கவனம் செலுத்தி வரும் கார்த்தி, படத்திற்குப் படம் வெவ்வேறு ஜானர்கள் அமையுமாறு பார்த்துக் கொள்வதுடன், தனது பாத்திரத் தேர்விலும் தனித்துவத்தை நிலைநாட்டி வருகிறார்.
நலன் குமாரசாமியின் இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து வந்தார். அந்தப் படம் முதலில் தொடங்கினாலும், சில காரணங்களால் பி.எஸ்.மித்ரனின் ‘சர்தார் 2’வை ஆரம்பித்து, அதனை முழு வீச்சில் முடித்தும் விட்டனர்.
இதனிடையே ‘வா வாத்தியார்’ படத்தின் பேட்ச் ஒர்க் வேலைகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. ஆக, இந்தாண்டில் கார்த்தியின் நடிப்பில் ‘வா வாத்தியார்’ முதலிலும், அதனைத் தொடர்ந்து ‘சர்தார் 2’வும் வெளியாக உள்ளது.

இந்நிலையில்தான் தனது 29வது படத்தை கையில் எடுக்கிறார். இயக்குநர் தமிழின் சொந்த ஊர் ராமேஸ்வரம் என்பதால், ராமேஸ்வரம் – இலங்கை கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார்.
இந்தக் கதை லைனைக் கேட்ட கார்த்தியும், ஆச்சரியமாகி முழு ஸ்கிரிப்டையும் ரெடி பண்ணச் சொல்லிவிட்டார். இப்படித்தான் ‘கார்த்தி 29’ உருவானது. இது ஒரு பீரியட் ஃபிலிம்.
இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திற்கு பஹத் பாசிலிடம் நடிக்கக் கேட்டனர். அவரது தேதிகள் கிடைக்காமல் போனதால், அந்த ரோலில் நிவின் பாலி நடிக்கிறார்.
ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் முதன் முறையாக கார்த்தியின் ஜோடியாகிறார். பிரபுவும் கமிட் ஆகியிருக்கிறார். படத்தில் வடிவேலு நடிப்பதாக வந்த தகவல்கள் உண்மையில்லை.

படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் ஆக இருக்கக்கூடும் என்கிறார்கள். கார்த்தியின் ‘கைதி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஒளிப்பதிவாளரான சத்யன் சூரியன் கேமராவைக் கவனிக்கிறார். படத்தொகுப்பு பிலோமின் ராஜ்.
சமீபத்தில் வெளியான நானியின் ‘ஹிட் : த தேர்டு கேஸ்’ படத்தில் கார்த்தி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆகையால், ‘கார்த்தி 29’லும் அவர் கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்ற பேச்சு இருக்கிறது.
இது தவிர, படத்திற்கு ‘மார்ஷல்’ என்று டைட்டில் வைக்க உள்ளதாகப் பேச்சு இருக்கிறது. நாளை காலை பிரசாத் லேப்பில் படப்பூஜையும், படப்பிடிப்பும் ஆரம்பமாகிறது.
தொடர்ந்து காரைக்கால், ராமேஸ்வரம் ஆகிய கடற்பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இதற்காக செட்களும் அமைத்துள்ளனர். தமிழ் இயக்கும் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கைதி 2’விற்கு வருகிறார் கார்த்தி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…