
இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கிய ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியான வசூலைப் புரிந்தது.
அப்படத்திற்குப் பிறகு கோலிவுட், டோலிவுட் என அனைத்துத் தரப்பிலும் மிகவும் விரும்பப்படும் இயக்குநராக வெங்கி அத்லூரிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அவருடைய அடுத்த திரைப்படத்திற்கு பலரும் காத்திருந்த சமயத்தில், சூர்யாவின் 46-வது படத்தை அவர் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.
தற்போது ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் சீக்குவல் தொடர்பாகவும், சூர்யா 46 தொடர்பாகவும் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் வெங்கி அத்லூரி.
அந்தப் பேட்டியில் இயக்குநர் வெங்கி அத்லூரி பேசுகையில், “என்னுடைய முதல் மூன்று படங்களை முடித்தப் பிறகு, ஒரே ஜானரில் படங்கள் எடுக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்.
எமோஷனல் மெசேஜ் கலந்த படங்களைச் செய்ய வேண்டாம் என முடிவு செய்து, ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கினேன். ஆனால், அப்படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பயோபிக் படங்களை இயக்குவதற்கு வாய்ப்புகள் வந்தன.

‘லக்கி பாஸ்கர்’ படத்திற்குப் பிறகு பீரியட் படம், த்ரில்லர் படம், பயோபிக் படம் ஆகியவற்றை எடுக்க வேண்டாம் என முடிவு செய்தேன். நான் மகிழ்ச்சி நிறைந்த குடும்பப் படங்களையே கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.
அந்தப் படங்களைப் பார்க்கும் மக்கள் சிரித்து, மகிழ்ந்து, அழ வேண்டும் என்று யோசித்தேன். அப்படியான திரைப்படம்தான் ‘சூர்யா 46’. கண்டிப்பாக ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் சீக்குவல் வரும்.” எனக் கூறியிருக்கிறார்.