Satya-Nadella-Microsoft

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

சமீபத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, சுமார் ₹1.25 லட்சம் கோடி ($15 Billion) வரை முதலீட்டில் கூகுளின் ‘Google AI hub data centre’-ஐ ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கட்டமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத்தொடர்ந்து தெலங்கானா அரசும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய முதலீடுகளைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. 30,000 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட ‘பாரத் ஃபியூச்சர் சிட்டி’ ஹைதராபாத்தில் அமையவிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம்
மைக்ரோசாப்ட் நிறுவனம்

இந்த வரிசையில் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பு, திறன் மேம்பாட்டிற்கான முதலீடு ஆகியவற்றில் ரூ.1.57 லட்சம் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இதுதான் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வம்சாவளியும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா, “இந்தியாவின் AI வளர்ச்சி குறித்த ஊக்கமளிக்கும் உரையாடலுக்காக பிரதமர் மோடி அவர்களுக்கு எனது நன்றிகள்.

மைக்ரோசாப்ட் ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 17.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் AI முதல் எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு, திறன்களை உருவாக்கவிருக்கிறது” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதற்கு பிரதமர் மோடி, “செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, இந்தியா மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. சத்யா நாதெல்லாவுடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் தனது மிகப்பெரிய முதலீட்டைச் செய்யும் இடமாக இந்தியா இருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி.

செயற்கை நுண்ணறிவின் சக்தியைப் புதுமைப்படுத்தவும் பயன்படுத்தவும் இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த மைக்ரோசாப்ட்டின் மிகப்பெரிய முதலீடு இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமையப்போகிறது என்பது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest