
முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வழக்கமாக நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்படவே உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

பின்னர் அபோல்லோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நடைபயிற்சியின்போது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனையில் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின் அவரின் உடல்நிலை குறித்து வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஒன்றும் ஆகவில்லை. நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். மாலையில் கூட வீடு திரும்பலாம்” என்று கூறினார்.
முதல்வர் கலந்துகொள்ளவிருந்த திருப்பூர் நிகழ்ச்சிகள் அவரின் உடல்நிலை காரணமாக தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.