
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் தில்காரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பீனா தேவி. இவர் தன் 4 குழந்தைகளுக்கு சாப்பாடுகூட கொடுக்க முடியாத அளவுக்கு வறுமையில் இருந்தார். சொந்தமாக நிலமும் கிடையாது. இதனால் விவசாயமும் செய்யமுடியவில்லை.
கணவர் கொண்டு வரும் வருமானத்தில் குடும்பம் நடத்துவது மிகவும் சவாலான காரியமாக இருந்தது. இதனால் வீட்டில் இருந்தபடியே என்ன செய்யலாம் என்று ஆலோசித்த பீனா தேவி வீட்டில் சொந்தமாக காளான் வளர்க்க முடிவு செய்தார். ஆனால் அதற்கும் வீட்டில் போதிய இடமில்லை.

இதனால் எப்படி காளான் வளர்ப்பது என்று ஆலோசித்து இறுதியில் தன் படுக்கைக்குக் கீழே காலியாக இருந்த இடத்தில் காளான் வளர்க்க முடிவு செய்தார்.
இதற்காக முதல் கட்டமாக ஒரு கிலோ காளான் விதையை விலைக்கு வாங்கி வந்து தனது படுக்கைக்குக் கீழே காளான் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். காளான் வளர்க்க குளர்ச்சியான அதே நேரத்தில் ஈரப்பதமான சூழ்நிலை தேவை. ஆனாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று கருதி காளான் வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். அதில் மிகவும் குறைவான மகசூல் கிடைத்தது. இதையடுத்து காளான் வளர்க்க முறைப்படி பயிற்சி எடுத்துக்கொள்ள பீனா தேவி முடிவு செய்தார். பாகல்பூரில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் வளர்க்க பயிற்சி எடுத்துக்கொண்டார்.
அதன் பிறகு அவரது வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்பட்டது. படிப்படியாக காளான் உற்பத்தி அதிகரித்தது. அவற்றை உள்ளூர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆரம்பத்தில் ஒரு கிலோ காளானை ரூ.200 க்கு விற்று வந்தார். தேவை அதிகரித்ததால் ஒரு கிலோ காளான் விலையை ரூ.300 ஆக அதிகரித்தார். இதனால் லாபமும் அதிகரிக்க தொடங்கியது. ஆண்டு வருமானம் லட்சங்களை தாண்டியது.
இதனால் பீனா தேவியால் தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மற்றும் ஆரோக்கியமான சாப்பாட்டை கொடுக்க முடிந்தது. பீனா தேவி தான் காளான் வளர்ப்பில் பெற்ற வெற்றியை மற்ற பெண்களும் பெற வேண்டும் என்று விரும்பினார். எனவே காளான் வளர்க்க விரும்பும் பெண்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். இதனால் இன்றைக்கு 100 கிராமங்களைச் சேர்ந்த 70,000 பெண்கள் பீனா தேவியிடம் காளான் வளர்க்க பயிற்சி எடுத்துக்கொண்டு காளான் வளர்த்து வருகின்றனர். இதன் மூலம் அப்பெண்கள் சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து பீனா தேவி கூறுகையில்,”பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறும்போது அவர்களின் சுயமரியாதை அதிகரிக்கிறது. குடும்பத்திலும், சமுதாயத்திலும் அவர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது”என்று தெரிவித்தார்.

பீனா தேவியின் இந்த செயலைப் பார்த்து அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் 2014ம் ஆண்டு அவரை கௌரவித்தார். இது தவிர 2018ம் ஆண்டு சிறந்த பெண் விவசாயி விருதை பெற்றார்.
2020ம் ஆண்டு அப்போது ஜனதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் சர்வதேச பெண்கள் தினத்தில் பீனா தேவியை நேரில் அழைத்து கெளரவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும் தனது `மான் கீ பாத்’ நிகழ்ச்சியில் பீனா தேவியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். பிரதமர் மற்றும் ஜனாதிபதியைச் சந்தித்தது குறித்து பீனா தேவி கூறுகையில்,”பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரைச் சந்தித்தபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் அவர்களுக்காக காளான், ஊறுகாய் மற்றும் பிஸ்கட் கூட எடுத்துச் சென்றேன்.
நான் காளான் வளர்க்கத் தொடங்கும்போது மக்கள் என்னை பைத்தியம் என்று அழைத்தனர். அவர்கள் என் வேலையைக் கேலி செய்தார்கள். ஆனால் நான் ஒருபோதும் அதனை நிறுத்தவில்லை. நான் நம்பியதைச் செய்து கொண்டே இருந்தேன் – நான் திரும்பிப் பார்க்கவே இல்லை. 60 முதல் 70 ஆயிரம் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். இப்போது அவர்கள் சம்பாதிக்கின்றனர். இனி அவர்கள் தங்களது கணவரிடம் பணம் கேட்கவேண்டியதில்லை”என்றார். காளான் உற்பத்தியோடு நிறுத்திக்கொள்ளாத பீனா தேவி இயற்கை விவசாயத்தையும் ஊக்கப்படுத்தி வருகிறார். ரசாயான உரம் இல்லாமல் எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்.