nagarjuna

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நாகார்ஜுனா நடித்திருந்தார்.

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாகேஸ்வர ராவின் மகனான இவர், சிறுவயதில் தன் தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, 1986-ல் ஹிந்தி படம் ஒன்றின் ரீமேக் திரைப்படமான `விக்ரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமானார்.

அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்து வெளியான பல படங்கள் சுமாராக ஓட, ஓரிரு படங்கள் மட்டுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

நாகார்ஜுனா - ரஜினி
நாகார்ஜுனா – ரஜினி

அப்படியான நேரத்தில்தான் 1989-ல் மணிரத்னம் இயக்கம், இளையராஜா இசை, பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு என இவர் ஹீரோவாக நடித்து தெலுங்கில் வெளியான `கீதாஞ்சலி’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பதிவுசெய்தது.

வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற இப்படம், தேசிய விருது மற்றும் மாநில விருதுகளை அள்ளியது

இந்த நிலையில் நாகர்ஜுனா, கீதாஞ்சலி படம் எடுக்க மணிரத்னத்தை சம்மதிக்க வைத்த நிகழ்வை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் ஜெகபதிபாபுவுடனான அந்த நேர்காணலில் தனது தொடக்க கால கரியர் குறித்து பேசிய நாகர்ஜுனா, “என் அப்பாவுக்காகத்தான் என் படத்தை மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். அதை நான் மாற்ற முடிவு செய்தேன்.

அப்போது, ஆகாரி போராட்டம், மஜ்னு உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.

அதில், மஜ்னு படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது” என்று கூறியவர் கீதாஞ்சலி படம் குறித்து பேசத் தொடங்கினார்.

நாகார்ஜுனா
நாகார்ஜுனா

“தினமும் காலை 6 மணிக்கு மணிரத்னம் சார் அலுவலகத்துக்கு வெளியே நிற்பேன். அந்த நேரத்தில்தான் அவர் வாக்கிங் செல்வார்.

அப்படியாக இறுதியில் ஒருநாள் அவரை நான் சம்மதிக்க வைத்தேன். முதலில் அவர் அதைத் தமிழில் எடுக்க விரும்பினார்.

ஆனால், தெலுங்கில் அவரின் மார்க்கெட் வளர வேண்டும் என்பதற்காக அந்தப் படத்தை தெலுங்கில் எடுக்கப் பரிந்துரைத்தேன்” என்று நாகர்ஜுனா கூறினார்.

1989-ல் கீதாஞ்சலி திரைப்படம் தெலுங்கில் வெளியான ஓரிரு மாதத்தில் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest