
நீலகிரி மலையில் இயற்கையான வாழிடச் சூழல்களை இழந்துத் தவிக்கும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்பு பகுதிகளிலும் விளை நிலங்களிலும் நடமாடி வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் முறையற்ற வகையில் கொட்டப்படும் உணவு கழிவுகளை உட்கொண்டு கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன.

குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் அங்கன்வாடிகளை சேதப்படுத்தி உள்ளே நுழையும் யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தானியங்களை உட்கொண்டு செல்கின்றன்றன. இந்த நிலையில், பந்தலூர் அருகில் உள்ள மேங்கோ ரேஞ்ச் பகுதி ரேஷன் கடைக்குள் நேற்று இரவு நுழைந்த யானைகள் அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை உட்கொண்டு இரவோடு இரவாக ரேஷன் கடையை காலி செய்துள்ளன.
இது குறித்து தெரிவித்துள்ள உள்ளூர் மக்கள், ” மேங்கோ ரேஞ்ச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது யானைகள் கூட்டமாக நடமாடி வருகின்றன. நேற்றிரவு ரேஷன் கடைக்குள் நுழைந்த யானைகள் மொத்தமாக காலி செய்தன. மசினகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளைதைப் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ரேஷன் கடைகளை கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நிறுவ வேண்டும்” என்றனர்.

இது குறித்து தெரிவித்த வருவாய்த்துறையினர், “குறிப்பிட்ட ரேஷன் கடைகள் மற்றும் அங்கன்வாடிகளை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையின் உதவியுடன் அவற்றைக் கண்காணித்து பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேங்கோ ரேஞ்ச் பகுதி மக்களுக்கு தேவையான குடிமைப் பொருள்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றனர்.