pawan-kalyan

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் `ஹரிஹர வீரமல்லு’ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதனால் பவன் கல்யாணின், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் ‘ஒஜி’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் மீது பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

செப்டம்பர் 25 தசரா பண்டிகை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தப் படத்துக்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது.

OG - பவன் கல்யாண்
OG – பவன் கல்யாண்

இந்தப் படத்துக்கு ஆந்திர மாநில அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், ஓஜி திரைப்படம் செப்டம்பர் 25 அன்று அதிகாலை 1 மணிக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சிறப்புக் காட்சிக்கான ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 25 முதல் 4 நாள்களுக்கு தனித் திரையரங்குக்கு ரூ.125 என்றும், மல்டிபிளக்ஸ் திரையரங்குக்கு ரூ.150 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த விலை உயர்வு ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர் ஓஜி திரைப்படத்துக்கான டிக்கெட்டை 1,29,999 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக வெளியான தகவலில், ஆந்திரா மாநிலம் யாதத்ரி-புவனகிரி மாவட்டம் சௌட்டுப்பலில் உள்ள ஸ்ரீனிவாசா தியேட்டரில், ஓஜி படத்தின் 25 செப்டம்பர் அதிகாலை 1 மணி காட்சிக்கான டிக்கெட் ஏலம் விடப்பட்டது.

OG - பவன் கல்யாண்
OG – பவன் கல்யாண்

ரூ.1000-த்தில் தொடங்கிய ஏலம் சௌட்டுப்பால் மண்டலத்தின் லக்காரம் கிராமத்தைச் சேர்ந்த அமுதலா பரமேஷ் என்ற ரசிகரால் முடிவுக்கு வந்தது.

இவர்தான் ஓஜி படத்துக்கான டிக்கெட்டை ரூ.1,29,999-க்கு வாங்கியிருக்கிறார். இந்த ஏலத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சிக்கு (ஜேஎஸ்பி) நன்கொடையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest