
இந்திய விமானப் படைத் (IAF) தலைவர் ஏ.பி சிங், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் பாகிஸ்தானின் 5 போர் விமானங்களையும் ஒரு கண்காணிப்பு விமானத்தையும் வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் சேதம்
பெங்களூரில் விமானப்படைத் தளபதி எல்.எம். கத்ரேவின் சொற்பொழிவில் பேசிய அவர், மே 10-ம் தேதி இந்தியா பாகிஸ்தானின் இராணுவத்தளங்களில் தாக்குதல் நடத்தியபோது ஜகோபாபாத் விமானப்படை தளத்தில் அமெரிக்க தயாரிப்பான F-16 விமானம் சேதமடைந்ததாகக் கூறியுள்ளார். அத்துடன் இரண்டு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் 3 நாள் தாக்குதலில் பாகிஸ்தான் சமரசம் பேசும் நிலைக்கு வந்ததாகவும், அப்போது சேதமடைந்த விமானத்தளங்கள் இன்று வரை மீண்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
300 கி.மீ தொலைவிலிருந்து தாக்குதல்!
“இந்தியாவின் தாக்குதலில் குறைந்தபட்சம் 5 தேர்ந்த விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு பெரிய விமானமும் வீழ்த்தப்பட்டது அது ELINT விமானம் அல்லது AEW&C (வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு) விமானமாக இருக்கலாம். இந்த தாக்குதல்கள் 300 கி.மீ தொலைவிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகப் பெரிய தரையிலிருந்து வானில் தாக்குதல் நடத்திய நிகழ்வு இதுதான்.” எனக் கூறியுள்ளார்.
ரஷ்யா வழங்கிய ‘கேம் சேஞ்சர்’
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ராணுவ ஆப்பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ராணுவ தலைவர் பொதுவெளியில் பேசுவது இதுவே முதன்முறை.
அவரது உரையில் ரஷ்ய தயாரிப்பான S-400 ட்ரையம்ஃப் வான் பாதுகாப்பு அமைப்பை, ‘கேம் சேஞ்சர்’ என அழைத்துப் பாராட்டினார். சமீபமாக வாங்கப்பட்ட இந்த அமைப்பு பாகிஸ்தானின் விமானங்களை தொலைவிலேயே வைத்திருந்ததால் அவர்களால் நீண்ட தூர சறுக்கு குண்டுகளைப் பயன்படுத்த முடியாமல் போனதாகக் கூறியுள்ளார்.
மேலும் ஆப்பரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.