Jeeva-digital

‘பாபநாசம்’ திரைப்படம் வெளியாகி பத்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. ‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், கன்னடம் என அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டு, இன்று அப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘த்ரிஷ்யம்’ படத்தைத் தொடர்ந்து தமிழிலும் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் ‘பாபநாசம்’ படத்தை இயக்கினார். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ் வெர்ஷனுக்கு படத்தின் வில்லி கதாபாத்திரத்திற்கு நடிகை ஆஷா சரத்தையும் இயக்குநர் அழைத்து வந்தார்.

பாபநாசம்
பாபநாசம்

‘பாபநாசம்’ திரைப்படம் வெளியாகி பத்தாண்டுகளைக் கடந்திருப்பதை ஒட்டி அவரைச் சந்தித்துப் பேசினோம். மலையாளம் கலந்து தமிழில் பேசத் தொடங்கிய அவர், “வணக்கம். ஆனந்த விகடன் ‘பாபநாசம்’ படத்திற்காக எனக்கு சிறந்த வில்லி விருது வழங்கியது. அந்த விருது எனக்கு மிகவும் ஸ்பெஷல். அந்த விருதுதான் என்னுடைய அலமாரியில் முன் வரிசையில் இருக்கும். அதற்காகவும் இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என உற்சாகத்துடன் வரவேற்ற அவரிடம் கேள்விகளை அடுக்கினோம்.

‘பாபநாசம்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. பாபநாசம் உங்களுக்கு எப்படியான ஒரு திரைப்படம்?

‘பாபநாசம்’ படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னால் ‘த்ரிஷ்யம்’ படத்தைப் பற்றி நான் பேச வேண்டும். அந்தப் படத்திற்காகத்தான் நான் முதன்முதலாக ஜீத்து ஜோசஃப் சாரைச் சந்தித்தேன். அந்த இரண்டு படங்களின் வாய்ப்பையும் நான் கடவுள் எனக்கு அளித்ததாக நினைக்கிறேன். 10 வருடங்களைக் கடந்திருப்பது எனக்கு ஒரு சாதனையாகவும் பெருமையான தருணமாகவும் இருக்கிறது.

Jeethu Joseph
Jeethu Joseph

‘த்ரிஷ்யம்’ படத்திற்காக முதலில் ஜீத்து ஜோசஃப் சார் உங்களிடம் கதை சொன்ன பிறகு கீதா கதாபாத்திரம் குறித்து உங்களுக்கு என்ன விஷயங்களைச் சொன்னார்?

‘த்ரிஷ்யம்’ படத்திற்கு முன் நான் பெரிதளவில் படங்களில் நடிக்கவில்லை. முதலில் ஃபஹத் ஃபாஸில் நடித்த ‘ஃப்ரைடே’ படத்தின் மூலமாகத்தான் நான் அறிமுகமானேன். பிறகு ‘ப்ரமயோதா’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லால் சாரின் மனைவியாக நடித்திருந்தேன். மூன்றாவதாக எனக்கு வந்ததுதான் ‘த்ரிஷ்யம்’. இந்தப் படத்தின் கதையை ஜீத்து ஜோசஃப் சார் என்னிடம் சொன்னபோது, நான் மீனா நடித்திருந்த கதாபாத்திரத்தில்தான் என்னை நடிக்க வைப்பார் என நினைத்திருந்தேன். பிறகுதான் வில்லன் கதாபாத்திரத்திற்காக என்னைத் தேடி வந்ததாக அவர் கூறினார். அழுத்தமான கதாபாத்திரம் அது. அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தி நான் எப்படி நடிப்பேன் என என்னால் அப்போது யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஜீத்து ஜோசஃப் சாரும் மோகன்லால் சாரும் கொடுத்த நம்பிக்கையில்தான் அந்தப் படத்தில் நடித்தேன்.

‘த்ரிஷ்யம்’ படத்தைத் தொடர்ந்து அதனுடைய தமிழ் வெர்ஷனான ‘பாபநாசம்’ திரைப்படத்திற்கும் உங்களை நடிக்க வைத்ததற்கான காரணத்தை ஜீத்து ஜோசஃப் கூறினாரா?

முதலில் மலையாளத்தில் நடித்த எவரும் தமிழ் வெர்ஷனில் நடிக்கக் கூடாது என ஸ்டிரிக்டாகச் சொல்லிவிட்டார். கமல் சாருடன் இணைந்து நடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. நானொரு பரதநாட்டிய நடனக் கலைஞர். கமல் சாரையும் நடிகர் என்பதைத் தாண்டி ஒரு நடனக் கலைஞராக அவ்வளவு ரசிப்பேன். இந்தப் படத்திற்குள் நான் வந்து நடித்திட வேண்டும் என்பது ஃபேன் கேர்ள் மொமன்ட்தான்.

இதற்கிடையில், நான் இயக்குநர் பி. வாசு இயக்கிய ‘த்ரிஷ்யம்’ படத்தின் கன்னட வெர்ஷனிலும் நடித்துவிட்டேன். கீதா கதாபாத்திரத்திற்காக பலரையும் தேடிப் பார்த்திருக்கிறார்கள். பின்னொரு நாள், ஜீத்து ஜோசஃப் சார் என்னை அழைத்து ‘வெல்கம் டு பாபநாசம்’ என்றார். இப்போதும் அந்தச் செய்தியைக் கேட்ட தருணத்தை நினைத்துப் பார்க்கையில் கூஸ்பம்ஸ்தான்!

10 Years Of Papanasam - Asha Sharath Interview
10 Years Of Papanasam – Asha Sharath Interview

மலையாளம், தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளிலும் மீண்டும் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடித்தபோது உங்களுக்குள் எதாவது அயர்ச்சி உணர்வு ஏற்பட்டதா?

இல்லை. அப்படியான எண்ணமும், அயர்ச்சியும் எனக்குத் துளியும் வரவில்லை. தமிழ் வெர்ஷனில் மலையாளத்தில் நடித்த என்னையும், மகளாக வரும் எஸ்தரையும் நடிக்க வைத்தார்கள். ஆனால், கன்னட வெர்ஷனுக்கு நான் மட்டும்தான் சென்றிருந்தேன். மூன்றுமே எனக்கு ஒரே போலீஸ் கதாபாத்திரம்தான். ஆனால், எனக்கு வெவ்வேறு படங்களில் நடிப்பது போன்ற உணர்வைத்தான் தந்தது. தமிழ் வெர்ஷனான ‘பாபநாசம்’ படத்தில் நடிக்கும்போது எனக்குப் பரிச்சயமான பலரும் பணிபுரிந்தார்கள். சொல்லப்போனால், மோகன்லால் சாரின் மகன் ப்ரணவ் மோகன்லாலும் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அப்படி எனக்கு நெருக்கமான பலரும் படத்தில் இருந்ததால் நான் கூலாகப் பணிகளைக் கவனித்தேன். மற்றபடி, நடிப்பில் சின்னச் சின்ன மாற்றங்களை ஒவ்வொரு வெர்ஷனிலும் நிகழ்த்திட வேண்டும் எனக் கவனமாக இருந்தேன். ஆனால், போர் என்பது கிடையவே கிடையாது பாஸ்!

கமல் ஹாசன், மோகன்லாலின் தீவிர ரசிகர். ‘த்ரிஷ்யம்’ முடித்துவிட்டு ‘பாபநாசம்’ படத்திற்கு நீங்கள் நடிக்கச் செல்லும்போது மோகன்லால் குறித்து கமல் விசாரித்தாரா? மீண்டும் இங்கு முடித்துவிட்டு ‘த்ரிஷ்யம் 2’ படத்திற்குச் செல்லும்போது கமல் குறித்து மோகன்லால் கேட்டாரா?

நிச்சயமாக இருவரும் நலம் விசாரிப்பார்கள். கமல் சாருடன் நான் பெரிதளவில் தொடக்கத்தில் பேசவில்லை. பிறகு, அவர் மலையாளத் திரைப்படங்கள் பற்றி என்னிடம் பேசுவார். என்னுடைய நடன அனுபவங்களை அவர் கேட்டறிவார். அதுபோல, நான் ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பிற்குச் செல்லும் முன் மோகன்லால் சார் என்னைத் தொடர்பு கொண்டு ‘பயமாக இருக்கிறதா? பயப்படாமல் தைரியமாகப் போ’ என்றார். ‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு எனக்குத் தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் வாய்ப்பு வந்தது. அதனால்தான் தமிழில் பிரேக் வந்துவிட்டது. இனி மீண்டும் தமிழில் பயணத்தைத் தொடங்குகிறேன்!

10 Years Of Papanasam - Asha Sharath Interview
10 Years Of Papanasam – Asha Sharath Interview

திருமணத்திற்குப் பிறகுதான் உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் பலவும் வந்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு குடும்பம், சினிமா எனச் சமாளிப்பது உங்களுக்கு எவ்வளவு சவாலாக இருந்தது?

சொல்லப்போனால், திருமணத்திற்கு முன்பே எனக்குச் சினிமாவில் பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், எங்கள் வீட்டில் என்னுடைய பெற்றோர்கள் ரொம்ப ஸ்டிரிக்ட்! உன்னுடைய கணவர் அனுமதித்தால் சினிமாவில் நடித்துக் கொள் என்பார்கள். கடவுள் கொடுத்த பரிசு போலவே என்னுடைய கணவர் வந்தார். என்னுடைய கனவுகள் அத்தனையும் புரிந்து கொண்டு என் முடிவில் விட்டுவிட்டார். அவருக்கு நான் சினிமாவில் இருப்பதில் மிகவும் இஷ்டம். எப்போதுமே கனவை நோக்கி நகரும்போது பார்ட்னரின் மகிழ்ச்சி நிறைந்த உறுதுணை மிகவும் முக்கியம். அப்படியானதுதான் இன்று வரை என்னை நகர்த்தியிருக்கிறது. சவால்கள் இருக்கும்தான். ஆனால், என்னுடைய கணவரின் உறுதுணையால்தான் அத்தனையையும் சமாளிக்க முடிகிறது.

தமிழ் சினிமாவில் பல குணசித்திர கதாபாத்திரங்களில் நடிகர் லாலைத் தான் நாங்கள் பார்த்திருக்கிறோம். அவருடைய இயக்கத்திலும் மலையாளத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள். அவர் எப்படியான ஒரு இயக்குநர்?

லால் சேட்டன் எங்களுடைய குடும்ப நண்பர். நான் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு முதல் முதலாக ‘கபூலிவாலா’ என்ற மலையாளப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்தார். ஆனால், அந்தச் சமயத்தில் என்னுடைய பெற்றோர்கள் நடிப்பதற்குச் சம்மதிக்கவில்லை. பிறகு, அவருடைய இயக்கத்தில் ‘கிங் லையர்’ படத்தில் நடித்தேன். அவர் அற்புதமான இயக்குநரும்கூட. லால் சேட்டனும் சித்திக் சாரும் இணைந்து பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்கள். சித்திக் சாரின் இழப்பு மலையாள சினிமாவுக்கு பேரிழப்பு. தமிழ் சினிமாவுக்கும் அது பேரிழப்புதான். அவர் ஒரு லெஜெண்ட்!

Siddique & Lal
Siddique & Lal

ஜெயராமும் – காளிதாஸ் ஜெயராமும் இணைந்து நடிக்கிற படத்தில் நீங்களும் நடிப்பதாகக் கேள்விப்பட்டோமே…

ஆமாம். அத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறேன். ஜெயராம் சார் கேரளாவின் பெரும்பாவூரில் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர். அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் இதுவரை அமைந்து தவறிவிட்டது. இம்முறை கைகூடிவிட்டது. மகனும் தந்தையும் இணைந்து நடிக்கும் அப்படத்திற்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மம்மூட்டி, மோகன்லால் என மல்லுவுட்டின் இருதுருவங்களுடனும் நடித்துவிட்டீர்கள். இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களும் தற்போது மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்கள், அதற்கு எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருக்கிறீர்கள்?

நான் மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி என மூன்று சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துவிட்டேன். மகேஷ் நாராயணன் இயக்கும் படத்திற்கு நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலையாள சினிமாவும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. அப்படத்தில் ஃபஹத் ஃபாஸில், நயன்தாரா எனப் பல நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

Drishyam 3
Drishyam 3

‘த்ரிஷ்யம் 3’ அப்டேட் கொடுங்களேன்…

படத்தைப் பற்றிய பெரிய அப்டேட்கள் எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன். கூடிய விரைவில் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது!

முழு வீடியோ பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest