
இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு மக்களின் அன்பும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். ‘பறந்து போ’ திரைப்படத்தைப் பார்த்து இயக்குநர் அட்லி நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
அந்தக் காணொளியில் இயக்குநர் அட்லீ, “ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ராம் சாரோட ‘பறந்து போ’ திரைப்படத்தைப் பார்த்தேன். அப்பாவுக்கும் மகனுக்குமான அழகான உறவைப் பிரதிபலிக்கும் திரைப்படம் இது. என்னுடைய நண்பர் சந்தோஷ் தயாநிதி படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே நாவல் தன்மையோடு அமைந்திருக்கின்றன. அஞ்சலியின் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்து மனதில் தங்கிவிட்டது. அதுபோல, மிர்ச்சி சிவா அண்ணனும் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார். நம்ம பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் மாதிரி ரொம்பவே யதார்த்தமாக கிரேஸ் ஆண்டனி நடித்திருக்கிறார்.

உண்மையாகவே, இந்தப் படம் பார்வையாளர்களுக்கு ரொம்பவே பிடிக்கும் திரைப்படமாக இருக்கும். படத்தில் வரும் சின்ன பையனும் அன்பு கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அன்புதான் இந்தப் படமே!
அலுவலகத்திற்குப் போகும் அப்பா, அம்மா, மகன் பற்றிய இந்தக் கதை நிச்சயமாக எல்லோராலும் கனெக்ட் செய்ய முடியும். வாழ்த்துகள் ராம் அண்ணா, உங்களுடைய படங்கள் எனக்கு எப்போதுமே ஊக்கம் அளித்திருக்கின்றன. எங்களுக்கு எப்போதுமே நீங்கள் ஊக்கம் கொடுத்திருக்கிறீர்கள். இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும்,” எனக் கூறினார்.