
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்தியப் பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக அறிவித்தார்.
2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, 18%, 28% என நான்கு வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது இந்த ஸ்லாப்கள் 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்களாக மட்டும் குறைக்கப்பட்டுள்ளன.

GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்டியல்!
இதன்படி மருத்துவம் சார்ந்த பொருட்கள், விவசாயம் சார்ந்த பொருட்கள், உணவுப்பொருள்கள், கல்வி சம்பந்தப்பட்ட பொருள்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரியாகவும், 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகித வரியாகவும், 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகித வரியாகவும் ஜிஎஸ்டி குறைக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றன.
இந்த புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் செப்டம்பர் 22ஆம் தேதியான நாளை முதல் அமலுக்கு வரவிருக்கிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
GST 2.0 குறையும் மாருதி கார்களின் விலை: Swift, Celerio, Baleno விலை என்ன?
இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் காணொளி மூலம் உரையாடும் மோடி பேசியவை;
நவராத்திரியின் முதல் நாளிலிருந்து, நாடு தற்சார்பு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்)வை நோக்கி மற்றொரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது. நாளையிலிருந்து, அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சூரிய உதயம் போல் அமலுக்கு வரும். ‘ஜிஎஸ்டி பச்சத் உத்சவ்’ (GST Bachat Utsav) என்ற விழாவும் தொடங்கும், இது உங்கள் சேமிப்பை அதிகரிக்கும்.
கடந்த பதினோரு ஆண்டுகளில், நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து முன்னேறியிருக்கின்றனர். அந்த 25 கோடி பேரும் ஏழைகளாக வறுமைக் கோட்டிற்குக் கிழே இருந்து முன்னேறி புதிய நடுத்தர வர்க்கத்தினராக மாறியிருக்கின்றனர். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்.
இந்த ஆண்டு, அரசாங்கம் ரூபாய் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளித்து ஒரு பரிசை வழங்கியது. அது மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்வில் ஒரு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுகிறது. இரண்டாவது பரிசாக இப்போது ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் நாட்டின் வளர்ச்சி இனி பெரும் முன்னேற்றைத்தை அடையும். இனிவரும் ஆண்டுகளில் ஏழையாக இருக்கும் இன்னும் பலகோடி இந்தியர்கள், புதிய நடுத்தர வர்க்கமாக முன்னேறுவார்கள். நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள் இன்னும் பல மடங்கு முன்னேறுவர்.
இந்த புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், நாட்டின் தற்போதைய தேவைகளையும் எதிர்கால கனவுகளையும் மனதில் கொண்டு நாளை முதல் செயல்படுத்தப்படுகின்றன.
மக்கள் முன்னேற்றத்திற்காக இன்னும் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும். இன்னும் பல முன்னேற்றங்களை அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களில் காணலாம். ரூபாய் 12 லட்சம் வரையிலான வருமான வரி விலக்கு மற்றும் புதிய ஜிஎஸ்டி குறைப்பு இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், ஒரே ஆண்டில் அரசு எடுத்த 2 முடிவுகள் நாட்டின் மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் சேமிப்பை ஏற்படுத்தும், அதனால்தான் இதை நான் ஒரு ‘சேமிப்பு விழா’ என்று சொல்கிறேன்.

அனைத்து மாநில அரசுகளும், தங்கள் மாநிலங்களுக்குள் உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதன் மூலம் தற்சார்பு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) மற்றும் சுதேசி திட்டத்திற்குத் தீவிர ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள். மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்படும்போது, தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்கு பார்வை நனவாகும்.
‘சுதேசி’ என்ற மந்திரம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு எப்படி வலிமை சேர்த்ததோ, அதே மந்திரம் நாட்டின் செழிப்பையும் வலுப்படுத்தும். இன்று, தெரிந்தும் தெரியாமலும், பல வெளிநாட்டு பொருட்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன.
பெரும்பாலும் நாம் அதை உணராமல் கூட இருக்கலாம். நம் சட்டை பையில் இருக்கும் சீப்பு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதா அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா என்பது கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்தச் சார்புநிலையிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ பொருட்களை, அதாவது நம் நாட்டின் இளைஞர்களின் கடின உழைப்பைப் பிரதிபலிக்கும் பொருட்களை வாங்க நாம் தேர்வு செய்து வாங்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி