
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 39 நகர்வுகளில் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார்.

மேலும் அவர் ஃப்ரீஸ்டைல் செஸ் லாஸ் வேகாஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்கும் முன்னேறி அசத்தி இருக்கிறார். இதேபோல், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி-யும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் குரூப் ஒயிட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேநேரத்தில் எரிகைசி குரூப் பிளாக்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
பிரக்ஞானந்தாவிடம் தோல்வியைத் தழுவிய ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், குரூப் ஒயிட்டில் ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. அதனால், லாஸ் வேகாஸ் பட்டத்திற்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். காலிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகிறது. அனைத்து நாக் அவுட் போட்டிகளும் கிளாசிக்கல் 30 + 30 என நேரம் வழங்கப்படுகிறது.
First Gukesh and now R Praggnanandhaa beats Magnus Carlsen Proud moment ❤️
— Sarcasm (@sarcastic_us) July 17, 2025
இந்த ஆண்டு ஏற்கனவே மூன்று போட்டிகளை வென்றுள்ள பிரக்ஞானந்தா, இப்போது கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் ஆகிய மூன்று வடிவங்களிலும் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 200,000 அமெரிக்க டாலர் முதல் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.