
மிக நல்ல விஷயமொன்று வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்படியென்ன நல்ல விஷயம் என்கிறீர்களா?
தங்கள் ஊரில் ‘புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருள்கள், போதைப்பொருள்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு கெடுதல் செய்கிற எனர்ஜி ட்ரிங்க்ஸை தடை செய்யும் தீர்மானத்தை’ ஒருமனதாக எடுத்திருக்கிறார்கள், பஞ்சாபில் உள்ள கட்டோரேவாலா (Katorewala) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய தீர்மான நகல்தான் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

பஞ்சாபில் உள்ள மாலவுட் சட்டமன்றத்தொகுதியில் இருக்கிறது கட்டோரேவாலா என்கிற கிராமம். இந்தக் கிராமத்தின் பஞ்சாயத்து, தங்கள் பிள்ளைகளின் உடல் நலனையும், எதிர்காலத்தையும் அழிக்கிற ‘புகையிலை, புகையிலைப்பொருள்கள், போதைப்பொருள்கள் மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் போன்றவை தங்கள் கிராமத்தில் கிடைக்கக்கூடாது என முடிவு எடுத்திருக்கிறது. அதன் முதல்கட்டமாக, உள்ளூர் கடைக்காரர்களை அழைத்து ஒரு கூட்டம் போட்டிருக்கிறார்கள் பஞ்சாயத்தின் உறுப்பினர்கள்.
அந்தக்கூட்டத்தில், தாங்கள் தடை செய்யவிருக்கிற பொருள்களை கடைக்காரர்கள் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறார்கள். மீறினால், அவர்களுக்கு 11 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீறல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு அதிலிருந்து 6 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 5 ஆயிரம் ரூபாய் கிராம குருத்வாரா நிதிக்குச் செல்லும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இது சென்ற மாதத்தின் இறுதியில் நிகழ்ந்திருக்கிறது.

சிறுவர்களும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதால் இப்படியொரு தீர்மானத்தை இயற்றினோம். அதை கிராமத்தலைவரிடமும் தெரிவித்து விட்டோம். எங்கள் தீர்மானத்தின் நகல் வைரலாகி விட்டதால், பலரும் எங்களை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். தவிர, மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தினரும் எங்களைப்போலவே புகையிலை மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை தடைவிதிக்க இருப்பதாக தெரித்திருக்கிறார்கள் என்கிறார்கள், கட்டோரேவாலா கிராமத்தின் பஞ்சாயத்து உறுப்பினர்கள்.
மிக நல்ல விஷயம்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR