
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜடோ யாத்திரையின்போது சீனாவிடம் இந்தியா ராணுவம், லடாக்கில் 2000 ச.கி.மீ பரப்பளவு நிலத்தை விட்டுக்கொடுத்ததாகப் பேசியதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏஜி மசிஹ் அமர்வில் இந்த வழக்கை விசாரித்தனர். 2020ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த வன்முறை சம்பவம் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு வலுவாக மறுப்பு தெரிவித்தனர்.

அந்த வன்முறைக்குப் பிறகு 2000 ச.கி.மீ இடத்தை சீனா ஆக்கிரமித்ததாகவும் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கம் ‘சரணடைந்துவிட்டதாகவும்’ ராகுல் குற்றம்சாட்டியிருந்தார். அவர்மீது ராணுவத்தை இழிவுபடுத்தியதாக கிரிமினல் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
“2000 ச.கி.மீ இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இது போலப் பேச மாட்டீர்கள்” என்றார் நீதிபதி தத்தா.
“நீங்கள் அங்கே இருந்தீர்களா, உங்களிடம் நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறதா” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி காந்தி.
ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்காவிட்டால்… அவர் எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நீதிபதி தத்தா, “எனில் நீங்கள் இந்த விஷயங்களை ஏன் நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை?” என எதிர்க்கேள்வி எழுப்பினார்.
பின்னர் வழக்கை ரத்து செய்யக் கோரிய ராகுல் காந்தியின் மனுவுக்கு எதிராக நோட்டீஸ் வழங்கியது நீதிமன்றம்.