
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நேற்று நடைபெற்றது.

ஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர் எனப் படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் பேசும்போது, “எப்போதெல்லாம் இந்த ரஜினிகாந்த் என்கிற மரம் விழப் போகிறதோ, அப்போதெல்லாம் என் ரசிகர்கள் என்னைத் தூக்கி விடுகிறார்கள். நான் அவர்களுடைய பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும்.
என் வெற்றிக்குப் பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது, அது உழைப்புக்கு அப்பாற்பட்டது. அதுதான் கடவுளின் குரல். உங்கள் குரலையும் கடவுளின் குரலையும் மனதில் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும்.
எவ்வளவு பணமும் புகழும் இருந்தாலும், வீட்டில் நிம்மதியும் வெளியே மரியாதையும் இல்லை என்றால், அந்த பணமும் புகழும் ஒரு பொருட்டாக இருக்காது.

நடனத்தின்போது சாண்டி மாஸ்டரிடம், “நான் 1950களின் மாடல். உடல் பாகங்கள் மாற்றப்பட்டிருக்கு. டான்ஸ் மூவ்ஸில் கொஞ்சம் கவனமா இருங்க” என்று சொன்னேன். அனிருத் பற்றி சொல்ல வார்த்தைகளே போதாது. அவன் தன் உச்சத்தில் இருக்கிறான். இந்தியாவின் முதல் ராக்ஸ்டார் அவன்தான். இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியா முழுவதும் மிகவும் தகுதியான இளைஞன். அனி, கடவுள் ஆசிர்வாதம்.
“படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கிறது, ரொம்ப முக்கியமான கதாபாத்திரம்,” என்று லோகேஷ் சொன்னார். நான் லோகேஷிடம், “யார் இதில் நடிக்கப் போகிறார்கள்?” என்று கேட்டேன். “ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்,” என்று சொன்னார். “ஸ்ருதியா? நீங்கள் அவரிடம் கேட்டீர்களா?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “கேட்டேன் சார். அவர் உங்க ஒப்புதலுக்காக போன் காலில் காத்திருக்கிறார். அவர் உங்க படத்தில் நடிக்க, அவர் அப்பாவோட படத்தை விட ரொம்ப ஆர்வமா இருக்கிறார்,” என்றார். கதை விவரிக்கும்போது லோகேஷ், “சார், நான் கமல் சார் ரசிகன்,” என்றார். “யோவ், நான் உன்னை கேட்டனா? நீ யாரு ரசிகன்னு நான் கேட்டனா? அப்புறம் ஏன்?” என்றேன்.
அதன் மூலம் அவர் மறைமுகமாக இது ஒரு புத்திசாலித்தனமான கதை, பஞ்ச் டயலாக் பேசுற விஷயங்கள் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

நான் கூலியாக வேலை பார்க்கும்போது நிறைய முறை திட்டு வாங்கியிருக்கிறேன். அப்படி ஒரு நாள் ஒருவர் அவருடைய லக்கேஜை ஒரு வண்டியில் ஏற்றச் சொன்னார். அதற்காக 2 ரூபாய் டிப்ஸாகக் கொடுத்தார்.
அவருடைய குரல் எனக்கு ரொம்ப பழகியது போல உணர்வு தந்தது. பின்பு தான் தெரிந்தது, அவர் என் காலேஜ் நண்பர்.
காலேஜ் நாட்களில் நான் அவரை நிறைய கிண்டல் செய்திருக்கிறேன். அப்போது அவர், “என்ன ஆட்டம் ஆடுனே டா!” என்று என்னிடம் சொன்னார். அன்றுதான் என் வாழ்வில் முதல் முறையாக அழுதேன்.” எனப் பேசினார்