
அம்மாவின் முந்தானையைப் பிடித்து வளர்ந்த மகனாக இருந்தாலும் சரி, தந்தையின் மடியில் படுத்து… செல்லமாய் சிணுங்கி… அடம் பிடித்து அழுது ஐபோன் வாங்கிய மகளாக இருந்தாலும் சரி, மேல்படிப்பு, வேலை, திருமணம் என்று வரும்போது பிரிவது சகஜமான ஒன்றே… இத்தனை நாள்கள் தன்னுடன் இருந்தவனை/இருந்தவளை எப்படிப் பிரிவது என்கிற தவிப்பு அதிகரிக்கும்போது பெற்றோருக்கு மனதில் ஒருவிதமான பாரம் உண்டாவதும் இயல்பான ஒன்றே… ஆனால், அந்த பாரம் ஒரு கட்டத்தைத் தாண்டும்போது நோயாக மாறுகிறது. அந்த `எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோமை’ எப்படி பாசிட்டிவாக கடப்பது என சொல்லித்தருகிறார், மனநல மருத்துவர் சங்கீதா சங்கரநாராயணன்.

பொதுவாக ஆண்கள் தங்கள் வேலைகளில் அதிக கவனம் செலுத்துவதால் அவர்களுக்கு பிள்ளைகளின் பிரிவால் ஏற்படும் பிரச்னை பெண்களைக் காட்டிலும் குறைவே. பெண்கள்தாம் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்பதால், அவர்களுக்கு இந்தத் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இதுபோன்ற சூழலில் அவர்களிடம் சில மாற்றங்கள் ஏற்படும். எப்போதும் எந்நேரமும் தங்கள் பிள்ளைகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்கள். தனிமையில் இருக்கவே விரும்புவார்கள். அவர்கள் முகத்தில் கவலை மட்டுமே இருக்கும். பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்களா, இல்லையா என்ற சந்தேகம் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். வெளியே எங்கும் செல்லாமல், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பார்கள். இவற்றால், மனஅழுத்தம் அதிகமாக இருக்கும்.

பிள்ளைகளின் நிலைமையையும், அவர்கள் எந்த வயதில், எப்படி இருப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டுக்குச் சென்ற பிறகு/திருமணத்துக்குப்பிறகு பிள்ளைகள் நம்மைக் கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணத்தை அறவே விட வேண்டும். இத்தகைய சூழலில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். தகவல் தொடர்புச் சாதனங்களின் வழியே பிள்ளைகளுடன் தொடர்பில் இருக்கலாம்.
பிள்ளைகள் நம்மை விட்டுப் பிரிந்து போகும் நிலை ஏற்பட்டால், அது அவர்களுடைய வாழ்வின் அடுத்த இன்னிங்க்ஸ் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுடன் பிஸியாக இருந்த நாள்களில் உங்களால் செயல்படுத்த முடியாமல் போன ஆர்வங்களில், பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிடலாம்.

உங்களைப் போன்றே பிள்ளைகளைப் பிரிந்து வாழும் பெற்றோருடன் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். பிரிவுத் துயரத்திலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்கிற அனுபவம் உங்களுக்கு உதவக்கூடும்.
உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தைச் செலவழிக்கலாம். கணவர் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலா செல்லலாம்.
தியானம், யோகா போன்றவற்றைச் செய்து மனதை அமைதியாக்கலாம்.
தனிமையைத் தவிர்க்க ஏதேனும் வகுப்புகள் எடுக்க ஆரம்பிக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இது உங்கள் வாழ்கையை நீங்கள் வாழ இயற்கை கொடுத்திருக்கும் செகண்ட் இன்னிங்ஸ். அதை வருத்தத்தில் கழிக்காமல், பயத்தில் தொலைக்காமல் உங்களுக்கே உங்களுக்கு என செலவழியுங்கள்!
ஹேப்பி ஓல்ட் ஏஜ்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR