நாடாளுமன்ற லோக்சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று பேசியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, SIR குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து அந்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் RSS அரசின் அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டதாக குற்றம்சாட்டி பேசி பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இதில் RSS அமைப்புக் குறித்துப் பேசியிருக்கும் ராகுல் காந்தி, “மகாத்மா காந்தியை நெஞ்சில் மூன்று குண்டுகளால் சுட்டுக் கொலை செய்தான் நாத்தூராம் கோட்சே. அதன்பிறகு CBI, அமலாக்கத் துறை, பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து அரசின் அமைப்புகளையும் RSS கைப்பற்றிவிட்டது”
ராகுல் காந்தி இவ்வாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு ராகுல் காந்தி, “இந்த உண்மை உங்களுக்குக் கசக்கத்தான் செய்யும்” என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “நாட்டில் வாக்குத் திருட்டு நடக்கிறது, ஜனநாயகம் துண்டாடப்பட்டிருக்கிறது. அதைப் பற்றிதான் நான் பேச வருகிறேன். இதெல்லாம் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றபிறகு, RSS அமைப்பு அரசின் அமைப்புகளை கைப்பற்றத் தொடங்கியதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. அதனால்தான் இந்த கசப்பான உண்மையை முதலில் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.
நான் சொல்லவருவது என்னவென்றால் RSS அமைப்பு அரசின் மற்ற அமைப்புகளை எப்படி கைப்பற்றியதோ, அந்த வரிசையில் இப்போது இந்தியத் தேர்தல் ஆணையமும் RSS அமைப்பால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதை நாடே அறியும்.

முதலில் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றினார்கள். அங்கெல்லாம் அறிவியலுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைப் பரப்பினார்கள், தங்களுக்கு வசதினார்களை உயர் பதவிகளில் அமர வைத்தார்கள்.
இரண்டாவதாக இந்தியாவின் இந்திய புலனாய்வு அமைப்புகள், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளை கைப்பற்றினார்கள். யாரெல்லாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை, அரசியல் எதிரியோ அவர்களை எல்லாம் குறிவைத்துத் தாக்கினார்கள்.
மூன்றாவதாக ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் எப்படியெல்லாம் ஜனநாயகத்தை சீர்கெடுத்திருக்கிறது என்பதற்கான ஆதரங்கள் எல்லாம் எங்களிடம் இருக்கிறது.
பிரதமரும், அமித்ஷாவும் எப்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரிகளைத் தேர்வு செய்ய முடியும்?
பிரதமரும் உள்துறை அமைச்சரும் தேர்தல் ஆணையருக்கு ஏன் இந்த விலக்கு பரிசை வழங்க வேண்டும்?
தேர்தல்களின் போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும். வாக்களித்த 45 நாட்களுக்கு பிறகு அதை அழிக்க அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது ஏன்?

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் (SIR) முறை கேடுகள், வாக்குத் திருட்டுகள் பல நடந்திருக்கின்றன. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரின் புகைப்படம் இந்தியாவின் ஹரியானா தேர்தல் வாக்காளர் பட்டியலில் 22முறை இடம்பெற்றிப்பது எப்படி? இதுபோல பல போலியான வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பது ஏன்?
தேர்தல் நடக்கப்போகும் சமயத்தில் அவசர அவசரமாக ஏன் SIR-யை செயல்படுத்த வேண்டும்?
இவையெல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையம் கைப்பற்றப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
இவர்கள் செய்ததில் மிகப்பெரிய தவறு ‘வாக்குத் திருட்டு’தான். அது இந்திய ஜனநாயகத்தையே கேள்விக் குறியாக்கியிருக்கிறது.” என்று பேசியிருக்கிறார் ராகுல் காந்தி
இதற்கான பதிலை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் இன்று அளிப்பார் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.