putin-trump

அமெரிக்கா தலைமையிலானா நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரித்த ரஷ்யா, 2022 பிப்ரவரி 24 அன்று ‘உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை’ என அறிவித்தது. அது அப்படியே உக்ரைன் ரஷ்யா போராக உருமாறி இன்றளவும் தொடர்கிறது. இந்தப் போரில் ஆரம்பத்தில் அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து பொருளாதார உதவி முதல் ஆயுத, இராணுவ உதவிவரை செய்து வந்தார். தற்போது அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்பும் உக்ரைனுக்கு மறைமுகமான ஆதரவு நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியிருக்கிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப்பின் எச்சரிக்கை:

இதற்கிடையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு, அபராத விதிப்பு, பொருளாதாரத் தடை எச்சரிக்கை எனத் தொடர்ந்து மிரட்டியும் வருகிறார். நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டோவும், “ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கோள்ளும் நாடுகள் தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்” என எச்சரித்தார். இதற்கிடையில், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் இந்தியாவையும் ட்ரம்ப் வெளிப்படையாக மிரட்டியிருந்தார்.

ரஷ்யாவின் எதிர்வினை:

அதைத் தொடர்ந்து தன் சமூக ஊடகப் பக்கத்தில், “இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் செத்துப்போன பொருளாதாரங்களுடன் ஒன்றாக வீழ்ச்சியடையட்டும்…” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார் ட்ரம்ப்.

இதற்கு எதிர்வினையாற்றிய Russia’s Security Council-ன் துணைத் தலைவரும், முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெட்வெடேவ், “எங்கள் பொருளாதாரம் அழிந்தால், அதற்குப் பழிவாங்கத் தயாராக இருக்கிறோம்” என பதிலளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவின் ‘Dead Hand’ குறித்து எச்சரித்து இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டிருக்கிறார்.

புதின்
புதின்

Dead Hand:

Dead Hand என்பது ரஷ்யா உருவாக்கியதாகக் கூறப்படும் ஒரு அணு எதிர்வினைத் திட்டம். இதற்கு மற்றொரு பெயர் Perimeter System. அதாவது, ஒரு நாடு ரஷ்யாவை அணு ஆயுதப் போரில் முற்றிலும் அழித்துவிட்டால் கூட, ரஷ்யாவின் இயந்திரங்கள் தானாகவே எதிரி நாட்டை அணு குண்டுகள் மூலம் முற்றிலும் அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் Dead Hand. இது “automated nuclear retaliation system” முறையில் செயல்படும். அதாவது ரஷ்யாவில் யாரும் உயிருடன் இல்லை என்றாலும் கூட, கண்காணிப்பு, கம்ப்யூட்டர், ராடார், launch கட்டமைப்புகள் தானாகவே இயங்கி எதிரிநாட்டை அழித்து பழிவாங்கும். இது குறித்துதான் ட்ரம்ப் தன் இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இரு வல்லரசு நாடுகளுக்கு மத்தியில் தொடங்கியிருக்கும் இந்தப் பனிபோரில், கடல்களுக்கு அடியில் யாருடைய கை ஓங்கியிருக்கிறது? அவர்களின் கடல் பலம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

அமெரிக்க கடற்படை
அமெரிக்க கடற்படை

American Ballistic Missile:

அமெரிக்க கடற்படையின் ஓஹியோ பிரிவு பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSBNs) கண்டறிய முடியாத, மறைமுக செயல்பாட்டுக்கும், அணு ஆயுதங்கள் மூலம் துல்லியமாக தாக்குவதற்கும் பெயர் பெற்றவை. தற்போது ‘Boomers’ என்று அழைக்கப்படும் இந்த வகைக் கப்பல்கள் குறைந்தது 14 செயல்பாட்டில் இருக்கின்றன.

தடுப்பு ரோந்துகளுக்காக வடிவமைக்கப்பட்ட இவை, ஒருமுறை மிகச் சரியாக பரமரித்தால் போதும், 15 ஆண்டுகள் வரை முழுமையாக செயல்படும். இந்த நீர் மூழ்கி கப்பல், சிறியளவிலான 20 நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை (SLBMs) சுமந்து செல்லும். இதன் முதன்மை ஆயுதம் ட்ரைடென்ட்.

American Fast Attack:

அணுசக்தியால் இயங்கும் யுத்த நீர் மூழ்கிக் கப்பகளை (SSN) அமெரிக்கா மூன்று வகைகளாக இயக்குகிறது:

  • வர்ஜீனியா பிரிவு

  • சீவுல்ஃப் பிரிவு

  • லாஸ் ஏஞ்சல்ஸ் பிரிவு (688 class என்றும் அழைக்கப்படுகிறது).

டோமாஹாக் ஏவுகணைகள், ஹார்பூன் ஏவுகணைகள், MK-48 டார்பிடோக்கள் பொருத்தப்பட்ட இந்த தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் எதிரி கப்பல்களைத் தேடி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உளவுத்துறையின் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கண்காணிப்பு, போரில் ஈடுபடவும் முடியும்.

அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்
அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்

அமெரிக்காவிடம் 24 வர்ஜீனியா பிரிவு (நவீன அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் வகை) இருக்கின்றன. அவற்றில் USS ஹவாய், USS வட கரோலினா, USS மிசோரி போன்றவையும் அடங்கும். இவை அமெரிக்க கடற்படையின் புதிய போர்க் கருவியாகவும், பல புதுமைகளை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க கடற்படையில் மூன்று சீவுல்ஃப் பிரிவு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. முதலாவது – USS சீவுல்ஃப் – 1997-ல் இயக்கப்பட்டது. சீவுல்ஃப்-பிரிவில் நீர்மூழ்கிக் கப்பல்கள், யுத்த கப்பல்கள், படகுகள் மீது தாக்குதல் நடத்த உருவாக்கப்பட்ட குண்டுகள் இருக்கும் எட்டு டார்பிடோ அறை இருக்கின்றன. ஒவ்வொரு அறையிலும் 50 ஆயுதங்கள் வரை வைத்திருக்க முடியும்.

லாஸ் ஏஞ்சல்ஸ்-பிரிவு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் படையின் முதுகெலும்பாக அமைகிறது. இவற்றில் குறைந்தது 24 தற்போது செயல்பாட்டில் உள்ளன. சோவியத் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள 1976-ல் கட்டப்பட்ட இவை, அதிவேகமாகவும், பதுங்கித் தாக்குதல் நடத்துவதிலும் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய நீர் மூழ்கி கப்பல்
ரஷ்ய நீர் மூழ்கி கப்பல்

Russian Ballistic Missile

நீரில் மூழ்கி தாக்குதல் நடத்தும் ரஷ்யாவின் யுக்திக்கு மூன்று வகையான கப்பல்கள் தோள்கொடுக்கின்றன.

  • போரே பிரிவு

  • டெல்டா IV பிரிவு

  • டைபூன் பிரிவு

உலகின் மிகப் பெரும் நீர் முழ்கிக் கப்பலை வைத்திருக்கிறது ரஷ்யா. அதில் சுமார் 14 பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSBN), போரே பிரிவு, டெல்டா IV பிரிவு உட்பட சுமார் 64 கப்பல்கள் உள்ளன.

ரஷ்ய கடற்படையில் அணு குண்டு ஏவுகணைகள் கொண்டு பல்லீஸ்டிக் தாக்குதல்(SSBN) நடத்தும் எட்டு போரே பிரிவு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் 16 புலாவா (நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து புறப்படும் பல்லீஸ்டிக் ஏவுகணை, அணு குண்டு ஏவக்கூடிய நீர்மூழ்கி) கப்பல் (SLBM), ஆறு 533-மிமீ டார்பிடோ லாஞ்சர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நீரில்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளையும், அடிமட்ட சுரங்கங்களையும் அழிக்க முடியும். இந்தக் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் உள்ளனர்.

டைபூன் பிரிவுடன் கட்டப்பட்ட டெல்டா IV பிரிவு நீர்மூழ்கிக் கப்பல்கள் ரஷ்யாவிடம் இருக்கின்றன. அதில் குறைந்தது 6 செயல்பாட்டில் இருக்கின்றன. 16 சினேவா SLBM-களுடன் ஆயுதம் ஏந்திய இவை, கடலில் ரஷ்யாவின் அணுசக்தித் தடுப்பின் முதுகெலும்பாகச் செயல்படுகின்றன.

ரஷ்ய நீர் மூழ்கி கப்பல்
ரஷ்ய நீர் மூழ்கி கப்பல்

Russian Fast Attack:

ரஷ்ய கடற்படை நான்கு யாசென் வகை அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களைக் வைத்திருக்கிறது. இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஐந்து 3M54-1 காலிபர் ஏவுகணைகள், நான்கு P-800 32-40 ஓனிக்ஸ் ஏவுகணைகளை வைத்து இயக்க முடியும். இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், நீண்ட தூர தரைத் தாக்குதல் மற்றும் துல்லியமாக எதிரிக் கப்பல்களை தாக்கும் ஆற்றல்மிக்கவை

ரஷ்யாவின் அகுலா பிரிவு நீர்மூழ்கிக் கப்பலில் சுமார் ஐந்து தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. இது ரஷ்ய கடற்படையின் ‘அமைதியான கொலை இயந்திரம்’ என்றும், மாகும் (சுறா) என்றும் குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் பிரிவுக்கு எதிராக, இந்த ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களான காலிபர், ஓனிக்ஸ் அல்லது கிரானிட் ஏவுகணைகள் இயக்கி எதிர்த் தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க முடியும்.

இரு வல்லரசு நாடுகளுக்குள் புகைந்துக்கொண்டிருக்கும் இந்தப் பனிப்போர் யுத்தமாக மாறக்கூடாது என்பதே உலக அரசியல் வல்லுநர்களின் கருத்து. ஆனால், என்ன நடக்கும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest