
தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிவரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ்.
இவரது இசையில் சத்தம் அதிகமாகவும், இரைச்சலாகவும் இருப்பதாக எழும் விமர்சனங்களுக்கு சமீபத்தில் நடந்த ட்ரெண்டிங் பட செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.
“எனக்கே எரிச்சலாகத்தான் இருக்கும்” – Sam C.S.
“நேஷனல் அவார்ட் முதல் ஆஸ்கர் வரை சிறந்த ஒலிக்கலவை என ஒரு துறைக்கு விருது கொடுப்பார்கள். என்னுடைய வேலை ஒரு படத்துக்கு பின்னணி இசை அமைப்பதுதான். அதை எவ்வளவு நேர்த்தியாக செய்ய வேண்டுமென எனக்குத் தெரியும்.
ஆனால் அதன்பிறகும் நிறைய செயல்முறைகள் நடக்கின்றன. சவுண்ட் எஃப்க்ட்ஸ், வசனங்களை எல்லாம் வைத்து ஒரு அவுட் வரும். அதற்கும் இசையமைப்பாளருக்கும் தொடர்பில்லை.
கே.ஜி.எஃப் படத்துக்குப் பிறகு, இசையை சத்தமாக வைத்துவிட்டால் காட்சி தப்பித்துவிடும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது.
இதனால் இயக்குநர்கள் இசையை சத்தமாக வைத்துவிடுகின்றனர். என்னென்ன படங்கள் என என்னால் சொல்ல முடியாது. நான் தியேட்டரில் பார்க்கும்போது ‘நாம இப்படி பண்ணலயே’ என்று தோன்றும். எனக்கே எரிச்சலாகத்தான் இருக்கும். இதற்கும் இசையமைப்பாளருக்கும் காரணமே இல்லை.

இசை – சவுண்ட் எஃப்க்ட்ஸ் – வசனம் ஆகியவற்றை மிக்ஸ் செய்யும் துறையில் இருக்கும் பிரச்னைகளுக்கும் இசையமைப்பாளர்களையே கைக்காட்டுகின்றனர்.
இன்னொரு பிரச்னை இருக்கிறது. அம்பத்தூரில் ஒரு திரையரங்குக்கு சென்றிருந்தபோது ஸ்பீக்கரே வேலை செய்யல.
ஒரு மல்டி ப்ளக்ஸில் ஆங்கிலப் படம் ஓடும். அவர்களின் மிக்ஸ் (ஒலிக்கலவை)-க்கு அதிக சத்தத்தில் வைத்துதான் பார்க்க முடியும். அடுத்த ஷோ அதே ஸ்கிரீனில் ஒரு தெலுங்கு படமோ, மாஸ் படமோ வைத்தால் அதில் சிக்கல் வருகிறது. ஒவ்வொரு தியேட்டருக்கும் இதுபோல பிரச்னைகள் இருக்கிறது. இதுக்கெல்லாம் இசையமைப்பாளர்களை் குறைசொல்லக் கூடாது.
இனி உங்களுக்கு இரைச்சலாக இருந்தால், ஒலிக்கலவை செய்யும் குழுவை குறைசொல்லுங்கள், அவர்கள் குறைத்துக்கொள்வார்கள்.” எனப் பேசினார்.